ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் அமைச்சரவைக் குழுவில் இடம்பெறாத போதிலும் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே. மிஸ்ரா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உக்ரைன் போரால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சென்செக்ஸ் 2,700 புள்ளிகள் சரிவு
ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக மும்பை பங்குச் சந்தை நேற்று கடுமையான சரிவைச் சந்தித்தது. மும்பைபங்குச் சந்தையில் 2,702 புள்ளிகள் சரிந்ததில் சென்செக்ஸ் குறியீட்டெண் 54,529 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 815 புள்ளிகள் சரிந்ததில் நிப்டி குறி யீட்டெண் 16,247 புள்ளிகளானது.ரஷ்யாவின் மாஸ்கோ பங்குச் சந்தையில் 50% அளவுக்கு சரிவு காணப்பட்டது.
100 டாலரைக் கடந்தது..
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 102 காசுகள் சரிந்தது. இதனால் ஒரு டாலர் ரூ.75.63 என்ற விலையில் வர்த்தகமானது. இதுபோல சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகில் கச்சா எண்ணெய் சப்பளை செய்யும் இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா திகழ்கிறது. உலக இயற்கை எரிவாயு தேவையில் 35 சதவீத பங்களிப்பு ரஷ்யாவினுடையதாகும்.