திறைசேரிக்குச் செலுத்தவேண்டிய உரிமைத்தொகையை செலுத்துங்கள்

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகத்தின் ஊடாக அரசாங்கத்தின் திறைசேரிக்கு செலுத்தப்பட வேண்டிய உரிமைத்தொகை பல வருடங்களாக உரிய முறையில் பரிமாற்றம் செய்யப்படவில்லையென்றும், இதனை உரிய முறையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப் குழு) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேரசிரியர் கௌரவ சரித ஹேரத் வலியுறுத்தினார்.

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் 23.02.2022 அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய 2015 முதல் 2021 வரையான காலப்பகுதிக்குள் பணியகத்தினால் உரிமைத்தொகை உரிய முறையில் சேகரிக்கப்பட்டிருந்தாலும், அது திறைசேரிக்கு அனுப்பப்படாமல் பணியகத்தின் நிலையான வைப்புக் கணக்குகளில் பேணப்பட்டு வந்தமை குறித்தும்  குழுவில் கலந்துரையாடப்பட்டது.

2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சேகரிக்கப்பட்ட உரிமைத்தொகை 16,591,075,088 ரூபாவாகும் என்பதுடன், திறைசேரிக்கு பரிமாற்றப்பட்டுள்ள தொகை 8,520,235,812 ரூபா மாத்திரமாகும். உரிமைத்தொகை சரியான முறையில் திறைசேரிக்குச் சென்றடைய வேண்டும் என கோப் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர் தொகையைவிட அதிகமாக சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட ஜீ எஸ் எம் பி தொழில்நுட்ப சேவை (தனியார்) நிறுவனத்தின் பணியாளர்களுக்குப் பணியகத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டமை குறித்தும் கோப் குழு கலந்துரையாடியது. இது குறித்து விசாரணை நடத்தி, பணியகத்தில் வெற்றிடங்கள் காணப்பட்டால் அவற்றை நிரப்புவதற்கு நிர்வாக சேவைத் திணைக்களத்தின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

அதேநேரம், 2019 செப்டெம்பர் 19ஆம் திகதிய 29/2019ஆம் இலக்க அரசாங்க நிர்வாக சுற்றுநிருபத்துக்கு அமைய நிர்வாக சேவைத் திணைக்களத்தின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்காமல் தற்காலிக, அமைய, நாட்சம்பளம், ஒப்பந்தம் அல்லது சலுகை ஆகிய அடிப்படையில் உள்ளவர்களை பணியகத்தினால் நிரந்தரமாக்க முடியுமாக இருக்கும் நிலையில், 189 பேர் நிரந்தரமாக்கியமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. நிர்வாக சேவைகள் திணைக்களத்திற்கு தமது ஊழியர்களின் தேவைகள் குறித்து மீண்டும் தெரிவிக்குமாறும் முறையான நடைமுறைகளுக்கு இணங்க இப்பிரச்சினையைத் தீர்க்குமாறும், கோப் குழுவின் தலைவர், பணியகத்தின் தலைவருக்கும், பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும் சிபாரிசு செய்தார்.

2,581,633 ரூபாய் செலவில் பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டத்திற்கு இணங்க 2019-2023 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம் இதுவரை சரியான முறையில் பணிப்பாளர் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை என கோப் குழு குறிப்பிட்டது. இதற்கான செயற்றிட்டம் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலப் பகுதிக்குள் பணியகத்தினால் கணக்காய்வுக் குழுக் கூட்டத்தை நடத்துவது குறைக்கப்பட்டமை குறித்து கோப் குழு கவனம் செலுத்தியதுடன், கணக்காய்வுக் கூட்டத்தை உரிய முறையில் நடத்துமாறும் வலியுறுத்தியது.

புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் தொடர்பில் 2019 செப்டெம்பர் 18ஆம் திகதி கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படாமை குறித்தும் கோப் தலைவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியமானது என குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கோப் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் திருப்தியான பதில்கள் வழங்கப்படாமையால் இந்த விசாரணைகளை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், ஒரு மாதத்தின் பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிறுவனங்களையும் மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டது. முதலாவது கூட்டத்தொடரின் மூன்றாவது அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படாமையால் அதனை 25ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அநுருத்த, கலாநிதி கௌரவ நாளக கொடஹேவா பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கலாநிதி கௌரவ ஹர்ஷ.டி சில்வா, கௌரவ இரான் விக்ரமரட்ன, கௌரவ சாணக்கியன் ராசமாணிக்கம், கௌரவ நளின் பண்டார, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டனர். சுற்றாடல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர கண்காணிப்பு உறுப்பினராகக் கலந்துகொண்டார்.

சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் மற்றும் ஜீஎஸ்எம்பி தொழில்நுட்ப சேவை (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.