இரண்டு பழமொழிகள்:
‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’; ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’. உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் இந்தியாவின் நிலை இதுதான். சர்வதேச அரங்கில் எல்லா நேரங்களிலும், எல்லா பிரச்சினைகளிலும் இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நல்ல தோழனாக இருக்கும் நாடு – ரஷ்யா. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு சாதகமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகிற நல்ல நண்பன்.
ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு மிக நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. ‘நேட்டோ’ அமைப்பில் உக்ரைன் இணைவது உள்ளிட்ட எந்த செயலும் தீவிரமான போருக்கு காரணமாக இருக்க முடியாது. வெளியில் அறிவிக்கப்படாத மறைமுகக் காரணம் ஏதும் இருப்பின், அது எத்தனை வலுவானதாக இருந்தாலும், ரஷ்யா மேற்கொண்டுள்ள ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ சற்றும் நியாயமற்றது.
போர் அறிவிப்புடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ள சில கருத்துகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. ‘சரித்திரம் கண்டிராத அளவுக்கு, பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்; எந்த எதிர்வினையையும் எதிர்கொள்ள ரஷ்யா தயார்’ உள்ளிட்ட வாசகங்கள் நடுநிலையாளர்களைத் துணுக்குற வைக்கின்றன. ஏன் இந்த வன்மம்? எதற்காக இப்போது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் உலகப் பொருளாதாரம் இப்போதுதான் சற்று மூச்சுவிடத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான உயிரிழப்புகள், கடுமையான நிதி நெருக்கடி, வறுமையும் நோயும் விடுக்கும் தாங்கொணா சுமைகள், சவால்கள். இவற்றுக்கு இடையே மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்புகிற தருணத்தில் இந்தப் போர் அவசியம்தானா?
இன்னும் ஓரிரு நாட்களில் போர் முடிவுக்கு வந்து விடலாம்; உறுதியாக ரஷ்யா வெற்றி பெறலாம். ஆனால் சர்வதேச அரங்கில் ரஷ்யா மீது ஏற்பட்டுள்ள களங்கம் அத்தனை எளிதில் நீங்கி விடாது. அதை விடவும், ரஷ்யா மீது உக்ரைன் மக்களின் கோபம், பகைமை மறைந்து போகாது. இதனால் புடின் பெறப்போகும் நன்மை என்ன? ரஷ்ய நாட்டுக்குக் கிட்ட போகும் நீண்ட காலப் பயன் என்ன? ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் தவறான கொள்கைகளைக் கொண்டிருந்தால் உலக மக்களை எந்த அளவு பாதிக்கும்? சரித்திரத்தில் பல சான்றுகள் உண்டு. இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கிறது உக்ரைன் போர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, ரஷ்ய நாட்டுக்கு வேண்டுகோள் விடுக்கும்; அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும். சீனா, வட கொரியா போன்ற சில நாடுகள் பொருளாதார தடையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தக உறவைத் தொடரும். இதற்கிடையில் இந்தியா மிகுந்த தர்ம சங்கடத்தை சந்திக்க நேரும். தொடர்ந்து நமக்கு நிபந்தனையற்ற நல்லாதரவு கரம் நீட்டி வரும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு, நமக்கு ஒத்து வராது. அதே சமயம், சர்வதேச அமைதியில் இந்தியாவின் பங்கு மிக கணிசமானது; மிக முக்கியமானது. நமது அயலுறவுக் கொள்கையை வகுத்த தலைவர்கள் தீர்க்கதரிசனம் மிக்கவர்கள்.
‘எந்த ஒரு நாட்டுடனான உறவையும், வேறு எந்த ஒரு நாட்டு உறவுடனும் தொடர்பு படுத்துவது இல்லை’. உலக நாடுகளும் இதனைப் புரிந்து கொண்டுள்ளன. சுதந்திர இந்தியா வகுத்துக் கொண்ட ஆரோக்கியமான அயலுறவுக் கொள்கை, இன்று நமக்குக் கை கொடுக்கிறது. ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு – இன்றேனும் புரிந்தால் சரி. உக்ரைன் போர் விளைவாகப் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறுமா? இந்தக் கேள்விதான் பிரதானமாக முன் வைக்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் இந்தியா ஓர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறதே…
என்ன செய்யலாம்? இதுகுறித்துப் பெரிதாக விவாதம் இல்லை. ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?’ என்கிற பாரதியின் வரி, நமது மனசாட்சியை அறைகிறது. அதேநேரத்தில், ‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் வரிகள் சிந்திக்க வைக்கிறது. ஓரிரு வாரங்களில் இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறைந்து உலகம், தன் போக்கில் செல்லலாம். ஆனாலும் இந்தக் கேள்வி மட்டும் தொடர்ந்து நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும்.
மானுட அறம் – செஞ்சோற்றுக் கடன் இரண்டில் எதை முன்னிறுத்துவது?