NSE முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் கைது; சிபிஐ அதிரடி!

என்.எஸ்.இ
எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தவர்
சித்ரா
ராமகிருஷ்ணா. இவர் முகம் தெரியாத சாமியார் ஒருவரின் பரிந்துரையின் பேரில்
ஆனந்த் சுப்பிரமணியன்
என்பவரை என்.எஸ்.இ-ன் ஆலோசகராக நியமித்ததாக கூறப்படுகிறது. அதுவும் இந்த பணியிடத்தை நிரப்ப எந்தவித விளம்பரமும் செய்யாமல் வெறும் ஆனந்த் சுப்பிரமணியனை மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருக்கிறார்.

இந்நிலையில் சித்ரா மற்றும் ஆனந்த் ஆகியோர் இணைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முகம் தெரியாத சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்திற்கு அதிக சம்பளம் கொடுத்து வந்ததாகவும் பகீர் தகவல் வெளியானது.

குறிப்பாக ஆனந்த் மூலமாக அந்த சாமியார் ஆதாயம் அடைந்து வந்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக செபி வெளியிட்டுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது, ஆனந்திற்கு அவரது பணியில் பெரிய அளவில் அனுபவம் இல்லை. சுமார் 20 ஆண்டுகளாக சாமியாரின் ஆலோசனையின் பேரில் தான் சித்ரா செயல்பட்டு வந்துள்ளார்.

ஆனந்த் நியமனத்திற்கு பின்னர் இவரது ஆலோசனை படியே செயல்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் சித்ராவிற்கு அதிகாரப்பூர்வ ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் மாறியுள்ளார். சித்ரா, மர்ம சாமியார், ஆனந்த் கூட்டணி வெளியுலகிற்கு தெரியவர கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் என்.எஸ்.இ-யில் இருந்து அடுத்தடுத்து பதவி விலகினர்.

தற்போது அந்த மர்ம சாமியாரே ஆனந்த் தான் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக வழக்கு சிபிஐ வசம் கைமாறியுள்ளது. இந்நிலையில் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.