சின்னத்திரைக்கு வந்த அடுத்த நடிகர் சிம்பு

ஒரு காலத்தில் டிவியில் நடிப்பவர்களை சினிமாவில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மிகவும் தயங்குவார்கள். அதனால், டிவியில் அறிமுகமான பல நடிகர்கள், நடிகைகள் நல்ல திறமையிருந்தும் சினிமாவில் அறிமுகமாக முடியாமல் தவித்து வந்தார்கள்.

காலம் மாறுவது போல் அதுவும் மாறியது. பெரிய திரையான சினிமாவிலிருந்து சின்னத் திரையான சினிமாவுக்கு சில முன்னணி நடிகர்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சென்றதன் பலனாக டிவியிலிருந்தும் சினிமாவுக்கு வர ஆரம்பித்தார்கள்.

சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, ஆர்யா, கமல்ஹாசன், விஷால், விஜய் சேதுபதி, என பல கதாநாயகர்கள் சினிமாவிலிருந்து டிவிக்குச் சென்று சில பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை வெவ்வேறு டிவி சேனல்களில் தொகுத்து வழங்கினார்கள்.

கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தபின் சினிமாவுக்கும் டிவிக்குமான பாகுபாடு, வித்தியாசம் மிகவும் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஐந்து சீசன்களாகத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 'விக்ரம்' பட வேலைகள் காரணமாக கடந்த வாரத்துடன் நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றார்.

அவருக்குப் பதிலாக சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. அவை உண்மைதான் என்று சொல்லும் விதத்தில் நேற்று நிகழ்ச்சிக்கான புரோமோவை வெளியிட்டுள்ளார்கள். ஓடிடி நிகழ்ச்சிதான் என்றாலும் அதுவும் சின்னத்திரை தானே. யூ டியுபில் வெளியான சிம்புவின் புரோமோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 22 மணிநேரத்தில் 18 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. நிகழ்ச்சிக்கும் இதே மாதிரியான வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.