சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அரசின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளானபிப்.24-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு ஜன.28-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, முதல்முறையாக இந்த ஆண்டு அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு கீழே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு அரசு சார்பில் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2018 ஆக.7-ம் தேதி முன்னாள் முதல்வரும். திமுக தலைவருமான கருணாநிதி மறைந்தார். அவரது மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அரசு சார்பில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால், அவரதுபிறந்தநாளை அரசு விழாவாககொண்டாடுவது குறித்து எந்தஅறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
குவியும் பாராட்டுகள்
இந்நிலையில், கட்சி மாச்சரியங்களை மறந்து ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக திமுக அரசு கொண்டாடி மரியாதை செலுத்தியிருப்பது பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த ஜன. 17-ம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105-வதுபிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா சிலை அமைந்துள்ள வளாகத்தை அவர் பெயரிலேயே தொடரச் செய்தது,அம்மா உணவகம் அதே பெயரில்தொடரும் என உறுதி அளித்ததுபோன்ற தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது.
தமிழிசை மரியாதை
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை ஜெயலலிதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் வெளியிட்ட பதிவில், ‘பணிந்து நின்றுதான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என நிரூபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது நினைவைபோற்றுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.