'44 வாக்குகளே கிடைத்ததால் விரக்தி' – திருப்பூரில் மநீம வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுவது: திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள் (50). மணி மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலின் 36-வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டார். மேலும் தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் ரூ.50,000 வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார். அந்தப் பகுதியில் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும் அப்பகுதி மக்களிடம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, மக்கள் நீதி மையம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றர். தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்த மணி, வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

மேலும், தேர்தல் செலவுக்காக அக்கம்பக்கத்தினர் வாங்கிய கடன் 50 ஆயிரத்தை எப்படித் திருப்பி தருவது என தெரியாமலும் இருந்துள்ளார். இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே நேற்று தகராறு நடந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார், மணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.