உக்ரைனில் பரிதாபம்: பிரியும் மகள், கதறும் தந்தை, உலகத்தை உருக வைத்த வீடியோ

பல வாரங்களாக தொடர்ந்துகொண்டிருந்த ரஷ்யா உக்ரைன் இடையிலான உச்சக்கட்ட பதற்றம் நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. வியாழனன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது தேவையற்ற ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அதிகாலை துவங்கிய இந்த தாக்குதலால் பலர் தங்கள் வீடுகளை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் தங்கள் குடும்பங்களை பிரிய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். 

உக்ரைனிலிருந்து வெளிவரும் புகைப்படங்களிலிருந்தும், அந்த புகைப்படங்களில் இருக்கும் மக்களின் கண்களில் காணப்படும் அச்சத்திலிருந்தும் அங்குள்ள சூழலை நன்றாக புரிந்துகொள்ள முடிகின்றது. 

இதயத்தை நொறுக்கும் ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் நாட்டைக் காக்க எல்லையில் போராட வேண்டிய காரணத்தால் தன் குடும்பத்துடன் செல்ல முடியாத தந்தை, தன்னைவிட்டு பாதுகாபான இடத்துக்கு செல்லும் மகளுக்கு பிரியாவிடை அளிக்கும் காட்சி மனதை பிசைகிறது. தன் மகளின் முகத்தை மற்றொரு முறை தன்னால் பார்க்க முடியுமா என்று கூட தெரியாத நிலை அந்த தந்தைக்கு. திடீரென போருக்கான சூழல் ஏற்பட்டதால், இவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. 

இந்த வீடியோ கிளிப் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் துக்க மிகுதியால் கண் கலங்குகிறது. உக்ரைன் மக்களின் தற்போதைய நிலையைக் காட்டும் அந்த வீடியோ, இதோ உங்கள் பார்வைக்கு. 

மேலும் படிக்க | நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்? ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நவடிக்கை என்ன?

இந்த வீடியோவில், ஒரு உக்ரேனிய தந்தை தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது தேம்பித் தேம்பி அழுவதைக் காண முடிகிறது. அவர் தனது மகளுக்கு அறிவுரைகளை வழங்குகிறார். பின் தனது மகளை கட்டிக்கொள்ளும் அவர் கடுப்படுத்த முடியாமல் அழத் தொடங்குகிறார். 

மகளும் தந்தையை கட்டிக்கொண்டு அழுகிறார். மற்ற குழும்பங்களைப் போல, அந்த நபரின் குடும்பமும் ஒரு பாதுகாப்பான புகலிடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 

ரஷ்யா உக்ரைன் மீது துவக்கியுள்ள ராணுவ நடவடிக்கைகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தந்தை மகள் பிரிவைப் போல பல பரிதாப நிகழ்வுகள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன. 

எதிர்பார்த்தபடி, புதின், இணையத் தாக்குதல்கள், ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களின் கொடிய கலவையைப் பயன்படுத்தி, உக்ரேனிய தளபதிகள் எதிர் தாக்குதல் செய்ய முடியாத வகையிலும், தங்களை முழு திறனுடன் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையிலும் அவர்களை தள்ளிவிட்டார். சில நாட்களாகவே தீவிரமான தாக்குதலுக்கான அடித்தளத்தை அவர் அமைப்பதாகத் தோன்றியது.

இரு தரப்பிலும் பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும், ரஷ்யப் படைகளில் 800 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

இன்று அதிகாலை, குடியிருப்பு கட்டிடத்தில் நடத்தப்பட்ட ரஷ்ய ராக்கெட் தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க | விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.