புதுடில்லி : உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை, அந்நாட்டின் அண்டை நாடுகளுக்கு அழைத்து சென்று அங்கிருந்து தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்ட உடன், அங்கிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா துவக்கியதால், தனது வான் எல்லையை உக்ரைன் மூடியது. இதனால், அங்கு சென்ற ஏர் இந்தியா விமானம் நாடு திரும்பியது. இதனையடுத்து மாற்று வழிகளில் இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டது. இதற்காக உக்ரைனுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள போலாந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை தாயகம் கொண்டு வர முடிவு செய்து குழுவை அனுப்பி வைத்தது.
தற்போதைய நிலையில் 16 ஆயிரம் இந்தியர்கள், உக்ரைனில் தவித்து வரும் நிலையில், அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.
இந்தியர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிறிங்கலா கூறுகையில், இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான வழிகள் கண்டறியப்பட்டு உள்ளது. தலைநகர் கீவ்வில் இருந்து சாலை மார்க்கமாக, போலாந்துக்கு 9 மணி நேரத்திலும், ருமேனியாவிற்கு 12 மணி நேரத்திலும் செல்ல முடியும். இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம், ஹங்கேரி, போலாந்து தூதரகங்கள் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், உக்ரைனில் இருந்து அதன் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள். இந்தியர்களை அழைத்து வருவதற்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்று கொள்ளும். இன்று, ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் நகருக்கு இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் செல்ல உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement