காங்கிரஸ் அல்லாத அரசுகள் உ.பி.யை இந்த நிலையில்தான் வைத்திருந்தன- ராகுல் காந்தி விளாசல்

அமேதி:
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர். 
பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அல்லாத அரசுகள், மாநிலத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றதாகவும், மக்கள் தொழிலாளர்களாக மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விமர்சித்தார். மக்கள் தங்கள் சொந்த நலனுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்க வேண்டும், ஜாதி மற்றும் மதத்தின் உணர்வுப்பூர்வ பிரச்சினைகளுக்காக வாக்களிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி வேலை கொடுக்காத கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே பணியாற்றுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 
“உத்தரபிரதேச மாநிலத்திற்கு எந்த குறையும் இல்லை. வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளலாம். பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் தேடி கூலி வேலை செய்யச் செல்கிறீர்கள். நீங்கள் ஏன் இங்கே வேலைவாய்ப்பை பெற முடியவில்லை?
பல ஆண்டுகளாக நீங்கள் சமாஜ்வாடி, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை தேர்ந்தெடுத்ததுதான் இதற்கு காரணம். இந்த கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தவறான வாக்குறுதிகளை அளித்து உங்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தன. பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி உதவி செய்கிறார். அந்த கோடீஸ்வரர்கள் இங்குள்ள மக்களுக்கு வேலை தருவதில்லை” என ராகுல் காந்தி பேசினார்.
மக்கள் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்வதற்கு காங்கிரசே காரணம் என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.