திருச்சி – ஊறும் வரலாறு 33: சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி’யும் – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி!

கலைக்காவிரியின் கதவுகள் திறக்கப்பட்டு அழைத்துச் செல்ல வந்திருக்கும் ஆட்டோக்களை நோக்கியும் பெற்றோர்களை நோக்கியும் குழந்தைகள் ஓடி வருகிறார்கள். அந்தக் கதவுதான் எல்லோருக்குமாகத் திறக்கப்பட்ட கலையின் கதவு என்பதை ஒருநாள் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். சற்று வயது கூடிய இளையவர்களும் சங்கீதம் வழிய ஹாய் சொல்கிறார்கள். அங்கேயே பரதத்திலும் கர்னாடக இசையிலும் பட்டம் மற்றும் பட்டயம் படிக்கும் இளைஞர்களையும் பார்க்க முடிகிறது. பரத உடையோடு கல்லூரி வளாகத்துக்குள் வளையவரும் பெண்களையும் பலவிதமான இசைக்கருவிகளின் சங்கீத ஒலிகளையும் கேட்கும்போது நம்மையும் அறியாமலேயே நாம் கலைக்காவிரியை வணங்குகிறோம். இந்தப் பரவசத்துக்குப் பின்னால் ஒரு சமூகவியல் வரலாறு இருப்பது உண்மை.

ஆட்டோவில் ஓடிப்போய் ஏறுகிற அந்தக் குழந்தைக்குத் தெரியாதல்லவா, தான் கற்கிற இந்த இசை 3000 ஆண்டுகளுக்கு முன்பு திணை இசைகளாகத் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டதென்பது. சீனர்களும் கிரேக்கர்களும் (யவனர்) இந்தத் தொல் இசையைக் கற்பதற்காக அலெக்சாண்டர் காலத்தில் நம் இசைக் கலைஞரை உடன் அழைத்துச்சென்ற செய்தியை கிரேக்க புவியியலாளர் ஸ்டிராபோ (கி.மு. 63-24) பதிந்துள்ளதை இன்னும் சில காலம் கழித்து, சிவபாலன் எழுதியுள்ள ‘தமிழிசை மரபு’ நூலைப் படிக்கும்போது அந்தக் குழந்தை தெரிந்துகொள்ளும். அப்போது இன்னும் பெருமிதத்தோடு தான் கற்கும் சங்கீதத்தை அது சாதகம் செய்யும்.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

கூத்து, நாடகம், நாட்டியம், நடனம், பாணர்கள், பாடினிகள், விறலியர் போன்ற சொற்களின் பழைமையும்; அவை பழந்தமிழ் இலக்கியங்களில் மிக நுட்பமான வேறுபாடுகளோடு கையாளப்பட்டதன் மேதைமையும், 12 வயதில் அரங்கேற்றத்துக்காக ஓயாமல் நட்டுவாங்கத்தின் தாளங்களுக்கு ஆடிக்கொண்டிருக்கும் அந்தக் கலைக்காவிரி பிஞ்சுக்குத் தெரிவதற்கு வாய்பில்லை. சிலப்பதிகாரம் சொன்ன ஆடற்கலையின் பதினோரு வகைக் கூத்தின் தொடர்ச்சிதான் தனது நடனம் என்பதை அந்தப் பிஞ்சு ஒருநாள் தெரிந்துகொள்ளும். மாதவி ஆடிய கொடுகொட்டி, அல்லியம், துடிக்கூத்து போன்ற ஆட்டங்களைப் பயிற்றுவிப்பவர்களை ‘ஆடல் ஆசான்’ என்றும் பாடல்களைப் பாடி இசைக்கருவியை இசைப்பவர்களை ‘இசையாசான்’ என்றும் ஒருங்கிணைத்து செம்மை செய்பவரை ‘தண்ணுமை ஆசான்’ என்றும் சிலப்பதிகாரம் வகைப்படுத்துகிறது. அப்படியென்றால் இளங்கோவின் காலத்திலேயே இசையையும் நாட்டியத்தையும் முறையாகச் சொல்லித்தரும் நிறுவனங்கள் இருந்திருக்க வேண்டும். அதாவது இன்றைய கலைக்காவிரியின் தலைக்காவிரி பூம்புகார் என்பது புரிந்துவிடுகிறது.

ஒரு பெரிய பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காப்பாற்றிய ஆர்ப்பரிப்பே இல்லாமல் இந்தக் கலைக்காவிரியும் அமைதியாகவே நகர்கிறது. இலக்கியச் சான்றுகளைக் கடந்து கல்வெட்டுச் சான்று ஒன்று ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் (அறச்சாலையூர்) உள்ள நாகமலையின் அண்டிப்பாறை குகையில் கிடைக்கிறது. கி.பி. 2 – 3 நூற்றாண்டைச் சேர்ந்த அந்த மூன்று கல்வெட்டுகளைத்தான் தமிழிசை குறித்த பழைமையான கல்வெட்டுக்களாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மணியவண்ணக்கன்தேவன் சாத்தன் என்பவன் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டுகளில் தமிழின் தாளச்சொற்கள் அழகாக அமைந்துள்ளன.

த தை தா தை த || தை தா தே தா தை || தா தே தை தே தா ||

இப்படி நாகமலையில் எதிரொலித்த அதே தாளச்சொற்களை காலமும் தாய்வழிச் சமூக கலைஞர்களும் காப்பாற்றி நம் கையில் தர, அந்த அடிப்படை ஒலியை இன்றைய தலைமுறைக்குத் தந்துவிடும் ஒரு பெரும் அறப்பணியை கலைக்காவிரி திருச்சியில் செய்துவருவதைத் தமிழ்க் கலையுலகம் கவனித்தேவருகிறது.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

விஜயநகர மன்னர்கள், நாயக்க அரசர்கள், மராட்டிய மன்னர்கள், சுல்தான்களின் ஆட்சிகளில் இசையில் தமிழ் தன் இடத்தை இழந்தது. அதிகாரத்தின் ஆதரவோடு அந்த இடத்தில் தெலுங்கு அமர்ந்தது. அருணகிரிநாதரும், சீர்காழியில் வாழ்ந்த முத்துத்தாண்டவரும் மாரிமுத்தாபிள்ளையும் அருணாசல கவிராயரும் (இவர்கள்தான் இசையின் முதல் மும்மூர்த்திகள்) செய்த தமிழ்ப்பாடல்கள் ஆட்சி அதிகாரத்தால் ஆதரிக்கப்படவில்லை. மாறாக தெலுங்குப் பாடல்கள் கீர்த்தனைகள் என்று போற்றப்பட்டன. தெலுங்குக் கீர்த்தனையின் இசை வடிவம் தேவாரப் பண்ணிசை தந்தது என்றும்; தெலுங்கிசை என்பது மொழி மட்டும் மாற்றம் பெற்ற தமிழிசையின் வளர்ந்த வடிவமே என்பதும் இசை அறிஞர் வீ.ப.கா.சுந்தரத்தின் ஆய்வு முடிவாகும். இதையே கர்னாடக இசை என்றும் அழைத்தனர்.

ஒரு கலையை நிகழ்த்து கலையாக மட்டுமே கற்காமல் அதன் வளர்ச்சியை, வரலாற்றை, நுட்பங்களை நவீனக் கல்வி முறையின் அடிப்படையில் ஒரு பாடத்திட்டத்தின் வழியாகக் கற்பதே அந்தக் கலையைப் பரவலாக்கும் என்ற புரிதலோடு தொடங்கப்பட்ட கலை நிறுவனம் கலைக்காவிரி. அதுவும் இசையும் கலையும் சாதியோடு பின்னப்பட்ட இந்திய சமூகத்தில், சாதியை விலக்கி, கலையை அதன் உன்னத நிலையில் வைத்து வளர்க்கும் பெரும் முயற்சியே கலைக்காவிரியின் செயல் திட்டம். இந்திய அரசியல் விடுதலை எப்படி பெண் விடுதலை, தலித் விடுதலை போன்ற பல சமூக விடுதலையையும் முன்மொழிந்ததோ, அதைப் போலவே சாதிகளிடமிருந்து கலைகளுக்கான விடுதலையையும் சேர்த்தே முன்வைத்தது. அதன் விளைவாகத்தான் தேவதாசி ஒழிப்புச் சட்டம் இங்கு நிறைவேறியது.

கலைக்காவிரியின் திறந்தவெளி அரங்கிலும் வகுப்பறைகளிலும் எல்லா சாதிப்பிள்ளைகளும் ஒருசேர அமர்ந்து, கற்று, பரதம் ஆடுவது சாதாரணமானதல்ல. 1930கள் வரை பரம்பரை நடனக் கலைஞர்கள் மட்டுமே பரதத்தை ஆடிக்கொண்டிருந்தனர். இதை மாற்றி, கலையின் தூய்மையைப் பிறப்பின் தூய்மையில் தேடாத அபூர்வக் கலைஞர்கள் பரதத்தைப் புதுப்பித்துக் காப்பாற்றினார்கள். பாலசரஸ்வதி போன்ற தாரகைகள் வெட்டிய மின்னல் வெளிச்சத்தில் சாதிய அழுக்கிலிருந்து பரதம் வெளியேறியது. அதன் சாட்சிதான் கலைக்காவிரியும் அங்கு ஜதி சொல்லும் நம் பிள்ளைகளும்.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

இசையும் நடனமும் கலந்த கலை பரதநாட்டியம். 1900களின் தொடக்கம் வரை புறக்கணிக்கப்பட்ட பரதநாட்டியத்தை 2000ஆம் ஆண்டில் ‘நடனப் பாரம்பரிய சங்கமம்’ என்ற உலகப் புகழ்பெற்ற அமெரிக்க அமைப்பை ஏற்க வைத்தவர் பாலசரஸ்வதி. அந்த அமைப்பு உலகின் நடன பொக்கிஷங்களாக 100 பேரைத் தேர்வு செய்தது. அதில் ஐரோப்பியர் அல்லாத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான். மனம் தோய்ந்த கலை வெளிப்பாடும், அந்தக் கலையை எல்லோரும் கற்கும் வகையில் அதை ஜனநாயகப்படுத்தும் போதுதான் தடைகளற்ற ஞானம் உள்நுழையும் என்ற புரிதலை பாலாவின் வாழ்க்கையிலிருந்து உணர்கிறோம். பாலாவின் மகள் லட்சுமியை மணந்த டக்ளஸ் எம்.நைட் எழுதியுள்ள “பாலசரஸ்வதி-அவர் கலையும் வாழ்வும்” படிக்கும்போதுதான், ஒரு தாய்வழி சமூகத்தால் பேணி வளர்க்கப்பட்ட பரதநாட்டியக் கலையைக் காப்பாற்றும் பணியை கலைக் காவிரி இன்று செய்துவருவது புரிகிறது.

ஸ்டாலின், அருள்திரு ஜார்ஜ் அடிகள்

1977, அக்டோபர் முதல் நாள் திருச்சியில் ‘கலைத்தொடர்பு நிலையமாய்’ கலைக்காவிரியை அருள்திரு ஜார்ஜ் அடிகள் உருவாக்கினார். கலைக்காவிரியைப் பொறுத்தமட்டில் அவர் ஜார்ஜ் அடிகள் அல்ல ‘ஜார்ஜ் அடிக்கல்’ என்று புகழப்படுகிறார். அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமாகவும் இருந்தார் அவர். தொடக்க காலத்தில் மேடை நாடகம், ஒலி நாடா தயாரிப்பு, ஒலி-ஒளி பதிவுக்கூடங்கள், கலைவிழாக்கள் என்றுதான் அதன் பணி இருந்தது. பிறகு அதன் கலைப் பயணம்தான் இன்று நாம் பார்க்கும் கலை காவிரி நுண்கலைக் கல்லூரி.

“பல சமயங்களில், பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் ’இயேசு காவியம்’தான் என்று நான் உறுதியாகக் கூறமுடியும்” இப்படிச் சொன்னவர் காவியத்தாயின் இளைய மகனான கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியிருந்த அவரை ஏசுவின் வாழ்வையும் வாக்கையும் எழுத வைத்தது கலைக்காவிரி, அதிலும் குறிப்பாக அதன் இயக்குநரான ஜார்ஜ் அடிகள்தான் எழுதவைத்தார். கண்ணதாசனே சொன்னார், ஒவ்வொருநாளும் எட்டு மணி நேரம் எழுதினேன். அதுபோல் தொடர்ந்து 15 நாள்களில் இயேசு காவியம் நிறைவடைந்தது என்றார். ஆனால் காவியம் நம் கைகளுக்கு வருமுன்பே கவிஞரைக் காலம் அழைத்துக்கொண்டது. 1982இல் இயேசு காவியம் வெளியிடப்பட்டபோது அவர் இல்லை. பல சந்தங்களில் எழுதியும் சில பகுதிகளை இசை அமைப்பதற்கு ஏற்பவும் கவிஞர் எழுதினார். இயேசுவின் மலைப்பொழிவைச் சொல்லாத ஞானிகளே இல்லை. அதை இயேசு காவியத்தில் கவிஞர் கையாண்டவிதம் அலாதியானது. கலைக்காவிரியின் சிறந்த பணிகளுள் ஒன்றாகவே இயேசு காவியம் பாராட்டப்படுகிறது. இந்தக் காவியத்தின் முதல் படியை முதல்வர் எம்.ஜி.ஆர் பெற்றுச் சிறப்பு செய்தார்.

இயேசு காவியம்
இயேசு காவியம்

கலைக்காவிரியில் இசை நாட்டியம் தொடர்பான அதன் பணிகளைப் பற்றி அதன் செயலர் தந்தை எஸ்.ஜி. சாமிநாதன் நம்மிடம் பேசினார். 1983இல் பகுதிநேர நாட்டியப் பள்ளியாகத் தொடங்கி 1988இல் முழுநேர நாட்டியப் பள்ளியாக வளர்ந்தது. 1990 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு பட்டயப்பயிற்சியும் 1993 முதல் முதுநிலை பட்டயப்பயிற்சியும் (POST DIPLOMA) கலைக்காவிரி வழங்கிவருகிறது. அதைப்போலவே, 1992 முதல் ‘ஏழிசை மணி’ என்ற ‘நான்கு ஆண்டுகள் முழுநேர இசைப்பயிற்சி’ பள்ளியை பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரத்தோடு நடத்திவருகிறது என்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1996இல் கலைக்காவிரியை நுண்கலைக் கல்லூரியாகத் தரம் உயர்த்தியுள்ளார்.

செயலர் தந்தையுடன் முதல்வர் மற்றும் தமிழ் பேராசிரியர்

கல்லூரியின் முதல்வர் ப.நடராஜன் பேசும்போது +2 முடித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முழுநேரப் படிப்பாக இசை-நடனம் இணைந்த பாடத்திட்டம் உள்ளது என்றும், முடித்ததும் BFA (Bachelor of Fine Arts) பட்டம் வழங்குவதாகவும் சொன்னார். இதே பட்டம் 10ஆம் வகுப்பு முடித்து ஐந்து ஆண்டுகள் படிக்கும்போதும் வழங்கப்படுவதாகச் சொன்னார். 1999 முதல் நாட்டியம் மற்றும் இசை இரண்டிலும் முதுகலைப் பட்டப்படிப்பும் இங்கு கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக பரத நாட்டியத்திற்கு இளங்கலை முதுகலை இரண்டிலும் பட்டப்படிப்பு வழங்கும் ஒரே கல்லூரி கலைக்காவிரி என்றார் முதல்வர். முழு நேரப் படிப்பாக வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பாடங்களில் BA, MA, MPhil, Phd வரை கல்வி கிடைப்பதாகவும் அவர் சொன்னார். 2013 ல் UGC சான்றிதழைப் பெற்றதோடு, தமிழ் நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாகவும் இது 2013 முதல் இயங்கத்தொடங்கியது.

பரதநாட்டியத்திற்கு நடந்த முதல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த முதல்வர் கருணாநிதி 2000 ஆம் ஆண்டில் கலைக்காவிரியை அரசு நிதி பெறும் கல்லூரியாக அறிவித்தார். அதன்பிறகு இங்கு படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையும் ஊக்கத் தொகையும் கிடைப்பதாக செயலர் தந்தை சாமிநாதன் சொன்னார். இதன்மூலம் கலை மறுக்கப்பட்ட எல்லா சாதி மக்களும் இசை-நாட்டியம் பயில்வதாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளுக்கும் கலை தாகம் தீர்வதாகவும் செயலர் தந்தை மகிழ்ந்தார். இன்று 26 பேராசிரியர்கள் இங்கு பணி செய்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பலர் நம் கலையை இங்கு வந்து கற்கிறார்கள். அதற்கு ஏற்ற தங்கும் விடுதிகளை கல்லூரியே நடத்துகிறது. 2002 ஆம் ஆண்டில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளிவிழாவின் போதுதான் இன்று நாம் பார்க்கும் யானைகள் வரவேற்கும் பிரமாண்டமான நுண்கலை மாளிகையும் திறந்தவெளிக் கலையரங்கமும் உள் அரங்கமும் கலை வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டன.

முதல் பட்டமளிப்பு விழா
முதல் பட்டமளிப்பு விழா

இக்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் மார்கரட் பாஸ்டின் செய்த “விபுலாநந்தரின் யாழ்நூல் ஒரு ஆய்வு” சிலப்பதிகாரத்தின் “வட்டப்பாலை ஒரு ஆய்வு” போன்றவை முக்கியமானவை. இவர் “சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம்” “வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி மூலமும் உரையும்” போன்ற 11 நூல்களையும் எழுதியுள்ளார். இன்றைய முதல்வர் ப.நடராஜனின் தமிழிசை வளர்ச்சியில் சீர்காழி கோவிந்தராஜனின் பங்கு” என்ற ஆய்வு பலரால் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். இசை – நாட்டியம் தொடர்பான பல ஆய்வுகளை இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களின் வழிகாட்டலில் பல இளம் ஆய்வாளர்கள் உருவாகியுள்ளதையும் பார்க்க முடிகிறது. சில தலைப்புகள் நம்மை கவனிக்கத் தூண்டின. “சிலம்பை முன் வைத்து–ஆடல் கலை அன்றும் இன்றும்”, “ஆலயம் சார்ந்த சிற்பங்களின் நடன அமைதி”, “எண்ணும் பரதமும்”, “சுந்தரர் பாடல்களில் இசை நுட்பம்”, ”இஸ்லாமிய நாடோடிகளான ஃபக்கிர்களின் இசை வழி”, “இளையராஜா இசை அமைப்பில் கர்நாடக இசைக் கருவிகளின் பங்களிப்பு”, “குன்னக்குடி வைத்தியநாதனின் இசைத் தொண்டு” எம்.கே.டி.பாகவதர், கே.வி.மகாதேவன் போன்றோரின் தமிழ்இசை வளர்ச்சியில் பங்களிப்பு போன்ற ஆய்வுகளை நம்மிடம் பேராசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர்.

ஓவியக் கலையில் நவீனம் நுழைந்த வேகத்தில் கர்னாடக இசையின் உள்ளடக்கத்தில் மாற்றம் நிகழவில்லை. அதற்கு மதத்துடன் உள்ள தொடர்புதான் காரணம் என்கிறார் இசை அறிஞர் டி.எம்.கிருஷ்ணா. சாகித்தியங்கள் வேறு கர்னாடக இசை வேறு என்ற புரிதலோடு, மற்ற செவ்வியல் இசை வடிவங்களைப்போலவே கர்னாடக இசையும் உலகளாவிய ரசனைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும், அதற்கு கர்னாடக இசையை மதத்திலிருந்து விடுவிக்கவேண்டுமென்ற கிருஷ்ணாவின் கவலையிலும் உரையாடல் சென்றது ஆரோக்கியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட ராகத்தில் அமைந்த கீர்த்தனையைவிட அதே ராகத்தில் அமைந்த திரையிசைப்பாடலை மக்கள் ரசிக்க எது காரணம் என யோசிக்கும்போதுதான் கிருஷ்ணாவின் பார்வை கவனம் பெறுகிறது.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

கலைக்காவிரியின் மாலை நேர கலைப்பள்ளி திருச்சியின் ஒரு வரம். மாலை 5-6 மற்றும் 6-7 என இரண்டு வகுப்புகள் நடக்கின்றன. 2000 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் பரதம், மோகினியாட்டம், கூச்சுப்புடி, கிராமிய நடனம் போன்ற நடனப்பயிற்சியும், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தபேலா, ஹார்மோனியம், புல்லாங்குழல், கிடார், கீ போர்டு, டிரம்ஸ், மேடைப்பாடகர் பயிற்சி, ஓவியம் போன்ற பல கலைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்து மேற்கத்திய இசைப்பயிற்சியும் நடக்கிறது. மாலை நேரக் கல்லூரியில் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் என்று பலரும் ஒரு மன அமைதிக்காக கலைகளிடம் தஞ்சம் புகுவதாக தமிழ்ப் பேராசிரியர் சதீஷ் குமார் சொன்னார். முழுநேரம் இசை நாட்டியம் படிக்கும் முதுகலை மாணவர்களே பகுதிநேரப் பள்ளியின் ஆசிரியர்களாய் கற்பிக்கிறார்கள். இது அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சியாகவும் கச்சேரிப் பயிற்சியாகவும் மாறுகிறது.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

கலைக்காவிரியின் இன்னுமொரு அடையாளம் அதன் ‘நடனக்குழு’. 1978 முதல் இன்றுவரை 2500 மேடை நடனங்களை இக்குழு நடத்தியுள்ளது. நல்ல தொழில்நுட்ப உதவியோடு இதமான ஒலி-ஒளி அமைதியோடு நடக்கும் இதன் நடன நிகழச்சிகள் நம்மை அசையாமல் கட்டிப்போடும். இவர்கள் நடத்திய ‘குறளோவியம்’ நாட்டிய நாடகம் கலைஞரைக் கவர்ந்ததாக அதற்கு இசையமைத்த முதல்வர் நடராஜன் கூறுகிறார். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். பல வெளிநாடுகளாலும் இக்குழு விரும்பி அழைக்கப்படுகிறது. போப்பாண்டவர் இரண்டாம் ஜான்பால், திபேத்திய புத்தமதத் தலைவர் ரீம்போச்சே, காஞ்சி சங்கராச்சாரியார், உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கிறிஸ்டியன் பெர்னார்டு போன்ற பலரின் பார்வையும் பாராட்டையும் பெற்ற குழு இது.

இசைக்கும் நடனத்திற்கும் தொலைதூரக் கல்வித்திட்டத்தை இக் கல்லூரிதான் நடத்திவருகிறது. உலகம் முழுவதும் 45 துணை மையங்களை உருவாக்கி நம் கலைகளை போதித்து சான்றிதழும் தந்து கலைக் காவலர்களாய் வலம் வருகிறார்கள்.

இங்குள்ள ஒலிப்பதிவுக் கூடம் மிகவும் உயர்வானது. இதில் தன் குரலைப் பதியாத ஆளுமைகளே தமிழ்நாட்டில் இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், எல்.ஆர்.ஈஸ்வரி, மனோ, சசிரேகா, டி.ஆர்.பாப்பா, குன்னக்குடி வைத்யநாதன், வைஜெயந்திமாலா பாலி, சின்னப்பொண்ணு என்ற அந்தப் பட்டியல் பெரியது. இதில் வாரியார் முதல் வைரமுத்து வரை தங்கள் உரையைப் பதிந்துள்ளார்கள்.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

கலைக்காவிரியில் பயின்ற பலர் உலகம் முழுதும் கலைப் பள்ளிகள் நடத்துகிறார்கள். இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இங்கு பணி செய்தவர். சூப்பர் சிங்கரில் மகுடம் சூடிய செந்தில் கணேஷ் குரலிசையில் 5 ஆண்டுகள் இங்கு படித்தவர்தான். சிங்கப்பூரில் நாட்டிய அகாதமி நடத்தும் மோகனப்பிரியன், பாடகர் சுவாதி கிருஷ்ணன், புனே கல்லூரியில் பரதநாட்டிய பேராசிரியராக இருக்கும் குமார், கிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறைத் தலைவராக இருக்கும் பிரபின் விலாரிஸ், வாரணாசியில் நடனத்துறை பேராசிரியராக பணி செய்யும் ரோஷ்மா ரூபா போன்ற பலரை சொல்ல முடியும். இங்கு நடனம் பயின்ற சாந்தா ஷீலாதான் செழியனின் டூ லெட் படத்தின் கதாநாயகி. ஜெய்பீம், கடைசி விவசாயி படங்களில் நடித்துள்ள சாப்ளின் சுந்தர் இங்கு மிருதங்கம் பயின்றவர்.

கலை உணர்வை மாணவர்களிடையே தூண்ட பள்ளிகளுக்கு இடையே தனியாகவும் கல்லூரிகளுக்கு இடையே தனியாகவும் கலைக்காவிரி நடத்தும் “கிளாசிக் ஃபெஸ்ட்” முக்கியமானது. அதற்கு இவர்கள் தரும் “கலைக்காவிரி விருது” கௌரவமாக பார்க்கப்படுகிறது. அதுபோலவே “இயல்-இசை-நாடகம்” உலகில் சிறப்பாக இயங்கும் சாதனையாளர்களுக்கு எல்லா ஆண்டும் 10,000 ரூபாய் பணமுடிப்போடு கலைக்காவிரி விருதும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பத்மஶ்ரீ விருது பெற்ற விராலிமலை முத்துகண்ணம்மாள் இந்த விருதைப் பெற்றவர்களுள் ஒருவர். இதோடு “கலைக்காவிரி பதிப்பகம்” ஆய்வு நூல்களையும் வெளியிடுகிறது. புதுக் கவிதையில் பழைய ஏற்பாட்டை “மீட்பின் காவியம்” ஆகக் கொண்டு வந்துள்ளார்கள்.

பேசிக்கொண்டே கலைகாவிரியைச் சுற்றியபோது அதை தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கிய ஜார்ஜ் அடிகளாரின் நினைவிடத்தில் நின்றோம். இவர் போப்பாண்டவரின் செயல்வீரர் என்று பொருள்படும் “மொன்சிஞோர்” என்ற உயர் தகுதியை அடைந்தவர். அவரைப்பற்றிய கல்வெட்டுக் குறிப்பில் “அயல் கலாச்சாரம் எனப்பட்ட கிறிஸ்தவ திருச்சபையை இந்திய கலைப் பணிகளில் ஈடுபடுத்தினார்…” என்று உள்ளது. ‘மண்மயப்படுதல்’ என்னும் மாண்பை மிகத் துல்லியமாக உணர்ந்து அதற்குச் செயல் வடிவம் தந்தவர் ஜார்ஜ் அடிகளார். கலைகளால் மதம் கடந்தும் ஒன்றுபட முடியும் என்பதற்கு திருச்சபை தந்துள்ள உயிர் சாட்சிதான் கலைக்காவிரி.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி

அங்குள்ள திறந்தவெளி நாடக அரங்கம் நேர்த்தியானது. அதில் நாங்கள் கலைக்காவிரியோடு இணைந்து நடத்திய நாடகக் கலைஞர் பிரளயனின் “வஞ்சியர் காண்டம்” நாடகத்தையும், “தீம்தரிகிட” ஞாநியின் பரீக்‌ஷா குழுவினரின் “மனுஷா மனுஷா” நவீன நாடகத்தையும் மாணவர்களோடும் மக்களோடும் சேர்ந்து ரசித்ததை இன்றும் மறக்க முடியவில்லை. தீவிர கலை வெளிப்பாட்டை மக்கள் ரசித்து ஏற்பார்கள் என்பதைப் புரியவைத்த நிகழ்ச்சிகள் அவை.

திறந்தவெளி அரங்கில் நடக்கும் இளம் கலைஞர்களின் அரங்கேற்றம் ரொம்பவே வண்ணமயமாக இருக்கும். பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் சூழ அந்தக் குழந்தைக் கலைஞர்கள் தேவதைகளாகத் திரிவார்கள். மனிதர்களின் மலினங்கள் கொஞ்ச நேரமாவது மரித்துப்போய்க் கிடக்கும். ஊரின் முக்கியஸ்தர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த மன ஓட்டம் நம்மைப் பழைய நினைவுகளில் தள்ள, உடன் வந்த பேரா.சதீஷ் குமார், “பச்சை மலையில் பிறந்த செம்பருத்தி என்னும் பழங்குடிப் பெண் இங்குதான் எம்.ஏ. கர்னாடக இசை படித்தார் ஐயா” என்றார். காவிரி மலையிலிருந்து இறங்குவது அதிசயமல்ல. இங்கு ஒரு இசைக்காவிரி மலை ஏறியதுதான் அதிசயம். கலைக்கோயிலின் கதவுகள் தாழ் திறந்து ஒரு மலைமகள் கலைமகள் ஆன அதிசயம் தானாய் நடக்கவில்லை. ஜார்ஜ் அடிகளார் போன்ற பலரின் கனிந்த மனசும் செயல் உறுதியும் தேவைப்படுகிறது. அதனால்தான் ஒரு பழைய பாடலில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போகிற போக்கில் சொன்னார்: “தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தம்பி, பழைய பொய்யடா.”

– இன்னும் ஊறும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.