வலிமை கொண்டாட்டத்தில் அரபிக்குத்துக்கு ஆடிய அஜித் ரசிகர்கள்
அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.. படமும் பைக் ரேசிங், அதிரடி சேஸிங் என தங்களை திருப்திப்படுத்தும் விதமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் வலிமை கொண்டாட்டத்தின்போது சமீபத்தில் வெளியான விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கும் அஜித் ரசிகர்கள் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
வலிமை படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக பொள்ளாச்சி தங்கம் தியேட்டரில் ரசிகர்கள் நேற்று இரவு கூடினார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வலிமை பட பாடல்களை தியேட்டர் வளாகத்தில் ஒலிக்க விட்டனர் தியேட்டர் நிர்வாகத்தினர். அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்று சமீபத்தில் வெளியாகி ஹிட்டான அரபிகுத்து பாடலையும் அவர்கள் ஒலிக்க செய்தனர்.
ஆனால் அஜித் ரசிகர்களோ அது விஜய் பாட்டு தானே என்கிற எந்த பாகுபாடும் காட்டாமல் அந்த பாடலுக்கும் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். அஜித், விஜய் ரசிகர்கள் இதுபோல ஒருவருக்கொருவர் நட்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.