அம்மா பயிற்சி… காஜல் அகர்வால் மகிழ்ச்சி
'அம்மா' என்ற வார்த்தையும், அதன் பாசமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிடித்தமான ஒன்று. சினிமாவில் மிகவும் பிரபலமான இருக்கும் சிலர் கொஞ்சம் தாமதமாகத் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் தாமதமாகக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், 'அம்மா'வாகும் போது அவர்களும் தங்களது 'பிரபலம்' என்ற முகத்திரையை தூரப் போட்டுவிட்டு அந்த மகிழ்வை சராசரி மனிதனாகப் பகிர்ந்து கொள்வார்கள்.
அப்படித்தான் தனது தாய்மை உணர்வை மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார் பிரபல நடிகை காஜல் அகர்வால். “அம்மா பயிற்சி, உங்களுக்குத் தெரியாத வலிமையப் பற்றி அறிந்து கொள்வது, நீங்கள் அறியாத அச்சத்தைக் கையாள்வது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
2020 அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும், சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா' படத்திலும் நடித்து வந்தார். தாய்மை அடைந்ததைப் பற்றி பல மாதங்கள் வெளியில் சொல்லாத காஜல் அகர்வால் தற்போதுதான் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார்.