மாஸ்கோ
உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது.
ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில் போர் புரிந்து வருகிறது. ரஷ்ய விமானப் படைகள் மற்றும் தரைப்படைகள் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைனில் விமான நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதால் அங்குள்ளவர்கள் தப்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியை நிலை நிறுத்துமாறு ரஷ்ய அதிபரிடம் இந்தியப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சீன நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங் தொலைப்பேசி மூலம் ரஷ்ய அதிபரிடம் பேசுகையில் உக்ரைனுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் பிரதமர் செலன்ஸ்கி தாம் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயார் எனத் தெரிவித்துள்ளார். இதையொட்டி ரஷ்ய அரசு உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது. அதன்படி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பெலாரச் தலைநகர் மின்ஸ்க் நகரைத் தேர்வு செய்துள்ளார்.
இங்கு உக்ரைன் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், வெளிநாட்டு அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து உயர் அதிகாரிகளைப் பிரதிநிதிகளாக தேர்வு செய்து அனுப்பத் தயாராக உள்ளதாக ரஷ்ய தலைமையகம் அறிவித்துள்ளது.