ஆயுதங்களை கீழே போட மாட்டோம்: நாட்டையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ரகசிய இடத்தில் உள்ளார்.
அங்கிருந்தபடி தான் பேசும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரஷியா தாக்குதலை தொடர்ந்து பேசிய அவர் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும் ரஷியாவை எதிர்த்து தன்னந் தனியாக போராடி வருகிறோம். எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ரஷியாவின் முதல் இலக்கு நான்தான், 2-வது இலக்கு எனது குடும்பம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:-
நாங்கள் அனைவரும் இங்குதான் (தலைநகர் கீவ்) இருக்கிறோம். ராணுவமும் இங்குதான் இருக்கிறது. குடிமக்களும் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது சுதந்திரம், நாட்டை பாதுகாப்பதற்காக இங்கு இருக்கிறோம். இதே வழியில் தொடர்ந்து இங்கேயே இருப்போம்.
தலைநகர் கீவ்வில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இன்று இரவு ரஷிய படைகள் கடும் தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும். நான் முற்றிலும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இந்த இரவு கடினமாக இருக்கும். நமது நாட்டின் பல நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
கீவ் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள். நமது தலைநகரை இழக்கக் கூடாது. உக்ரைனின் தலைவிதி விரைவில் தெரிந்துவிடும்.நாட்டு மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். நமது நாட்டுக்கு அதிக உதவி, அதிக ஆதரவு கேட்டு இருக்கிறோம். இந்த படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதே நமது முக்கிய நோக்கம்.
ராணுவத்தை சரண் அடைய நான் கூறியதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் அவ்வாறு கூறவில்லை. நாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்கள் ஆயுதங்களையும் கீழே போட மாட்டோம். இது எங்கள் நாடு. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம். எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோவில் அதிபர் மாளிகைக்கு முன்பு நின்ற படி அவர் பேசுகிறார்.
இதற்கிடையே அமெரிக்கா அரசு உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிடம் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
போர் இங்குதான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு தேவை வெடிமருந்துகள்தான். சவாரி அல்ல என்று ஜெலன்ஸ்கி கூறியதாக அமெரிக்கா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.