உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ!

உக்ரைனை சூழ்ந்து, தற்போது மழையாய் பொழிந்து வரும் போர்மேகம், பல உயிர்களை பலி கொண்டு கவலைக்குரிய சேதங்களையும் ஏற்படுத்தி வரும் செய்திகள் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கவலைகளுக்கு மத்தியில் உக்ரைனில் 23 வயது பெண் உக்ரைனில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், என்ற செய்தி ஒரு புன்சிரிப்பை முகத்தில் கொண்டு வருகிறது.

உக்ரைன் தொடர்பான செய்திகள் அனைத்துமே அழிவு, சேதம், வெடிகுண்டு என்று இருக்கும்போது, உயிர் ஒன்று போர்க்களத்திற்கு மத்தியில் பூத்திருப்பது எதுவும், எப்போதும் மனதையும், கவலைகளையும் மாற்றலாம் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

மேலும் படிக்க | உக்ரைனில் மக்களின் பதுங்குக்குழிகளாக மாறிய அண்டர்கிரவுண்ட் மெட்ரோ

உக்ரைனில் சண்டை தொடங்கியபோது, தாக்குதல்களில் இருந்து தப்பிக்க நிறைமாத கர்ப்பிணிப் பெண், நிலத்தடி மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், பிரசவம் எப்படி ஆகுமோ என்ற கவலை அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது.

ஏதாவது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலைகளுக்கு மத்தியில் கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்தது. பிரசவ வலியில் துடித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உக்ரைன் போலீசார் விரைந்து வந்து உதவி செய்தனர்.

 

நேற்று இரவு சுமார் 8.30 க்கு பெண் குழந்தை பிரசவமானது. மியா என்ற குழந்தையைப் பெற்றெடுக்க போலீசார் உதவினார்கள். பிரசவத்திற்கு பிறகு, ஆம்புலன்சில், தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது 23 வயது இளம் தாயும், பச்சிளம் குழந்தை மியாவும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சம் புகுந்த மெட்ரோ நிலையத்திலேயே கர்ப்பிணிப் பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்த செய்தியை கேட்ட Democracy in Action Conference அமைப்பின் தலைவி ஹன்னா ஹாப்கோ (Hannah Hopko) பகிர்ந்து கொண்டார். 

“மியா இந்த இரவில் தஞ்சம் புகுந்த மெட்ரோ நிலையத்தில் பிறந்தார். கியேவ் நகரில் வெடிகுண்டு சப்தங்களுக்கு இடையில் பூத்த பிஞ்சு. இந்த சவாலான பிரசவத்திற்குப் பிறகு அவரது அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார்.”

மேலும் படிக்க | உக்ரைனில் பரிதாபம்: பிரியும் மகள், கதறும் தந்தை, உலகத்தை உருக வைத்த வீடியோ

அவநம்பிக்கையை விதைக்கும் போர்க்காலத்தில் பூத்த குழந்தையின் பிறப்பு செய்திக்கு பலரிடமிருந்து மனதைத் தொடும் நெகிழ்வான பதிவுகள் வந்துள்ளன.

வெடிசப்தங்களுக்கு மத்தியில் அண்டர்கிரவுண்ட் மெட்ரோவில் பிறந்த பிஞ்சுக்குழந்தை உக்ரைனில் போர்மேகங்களுக்கு இடையில் விடிவெள்ளியாக இருக்குமா?

மேலும் படிக்க | விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.