மேயர் பதவிக்காக தி.மு.க.வுடன் பா.ஜனதா மல்லுகட்டுவது ஏன்?- பொன்.ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இதில் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க. பெருவாரியான கவுன்சிலர்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை கைப்பற்றி உள்ளது.

வருகிற 4-ந் தேதி மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா ஓரளவு வாக்குகளை பெற்று உள்ளது.

பா.ஜனதா வலிமையாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலை சந்தித்தது. மொத்தம் 52 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் 32 இடங்களை கைப்பற்றி உள்ளன.

ஆனாலும் அங்கு மேயர் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவுக்கு 11 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வுக்கு 7 கவுன்சிலர்களும் இருக்கிறார்கள். இருந்தும் மேயர் பதவிக்காக பா.ஜனதா மல்லுகட்டுகிறது. போட்டியில் வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்து உள்ளது.

இதனால் வாய்ப்பே இல்லாத நிலையிலும் பா.ஜனதா வரிந்து கட்டுவது ஏன் என்ற கேள்வி அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த மாவட்ட தேர்தல் பொறுப்பை கவனித்து வரும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கேள்வி:- உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில்:- கடந்த காலங்களை விட பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை தமிழகம் முழுவதும் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அது பேரலையாக இருந்ததை பார்க்க முடிகிறது.

கேள்வி:- பொது தேர்தலை விட அதிகமாக இந்த தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுத்தது அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பதில்:- திருமங்கலம் பார்முலா தொடங்கியது முதல் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தேர்தலுக்கு தேர்தல் ஒவ்வொரு வடிவங்களில் மாறி வருகிறது.

முன்பெல்லாம் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற்றால் இந்த பகுதிக்கு அவர் என்ன செய்வார் என்ற கேள்விதான் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நீ வெற்றி பெற எனக்கு என்ன தருவாய் என்று எதிர்பார்க்கும் மனநிலை அதிகரித்து உள்ளது.

பொதுவாக வெற்றி பெறும் பிரதிநிதிகள் அரசின் மூலமாக வரும் திட்டங்களை, சலுகைகளை நமது பகுதிகளுக்கு எப்படி வந்து கொண்டு சேர்க்கப்போகிறார் என்பதற்கு பதிலாக அவர்கள் ஜெயித்தால் என்னவெல்லாம் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புத்தான் அதிகரித்து உள்ளது. இந்த மனநிலை உருவாவதற்கு தி.மு.க.வே அடித்தளமிட்டது.

கேள்வி:- கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக பேரலை வீசியதாக கூறுகிறீர்கள். அப்படி இருந்தும் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறாமல் போனதற்கு என்ன காரணம்?

பதில்:- இல்லாமை… பொருள் இல்லாமை… கொடுக்க இயலாமைதான் காரணம்.

கேள்வி:- மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் இல்லாமல் இருந்தும் அதை பெறுவதற்கு பா.ஜனதா முயற்சிப்பது ஏன்?

பதில்:- எந்த ஒரு தேர்தலிலும் போட்டியின்றி ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது நல்லதல்ல. நேரடி தேர்தல்களில் மக்களை சந்திக்கும்போது, போட்டியிடும் பல கட்சிகள் எந்த கட்சி நல்ல கட்சி, எந்த வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்பதை பார்த்து மக்கள் தேர்வு செய்வார்கள்.

அதேபோலத்தான் மேயர் தேர்தலிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- தி.மு.க. கூட்டணிக்கு அரிதி பெரும்பான்மை இருக்கிறது. எனவே அவர்கள்தான் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். இதில் நீங்கள் போட்டியை ஏற்படுத்துவது உங்களுக்கு எப்படி வெற்றியை தரும்?

பதில்:- எங்கள் வேட்பாளர் மீனாதேவ் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது 10 வருடங்கள் நகராட்சி தலைவராக இருந்து நல்ல நிர்வாகத்தை கொடுத்துள்ளார். அது இந்த பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவரை இந்த பகுதி மக்கள் தங்கள் வீட்டின் ஒரு பெண்ணாகவே பார்க்கிறார்கள்.

எனவேதான் ஒரு சிறந்த நிர்வாகியை மேயர் வேட்பாளராக நிறுத்துகிறோம். அவர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம். ஒரு சிறந்த நிர்வாகியை போட்டி களத்தில் போட்டியிட வைப்பது எங்கள் கடமை.

அதேநேரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து கவுன்சிலர்களையும் நாங்கள் கேட்பது மனசாட்சிபடி வாக்களியுங்கள். கட்சிப்படி வேண்டாம். நாகர்கோவில் நகரத்துக்கு நல்ல நிர்வாகம் வேண்டும் என்ற உணர்வோடு மேயரை தேர்வு செய்வோம் என்றுதான் சொல்கிறோம்.

கேள்வி:- ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்களை இன்னொரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க கோருவது அவர்கள் வாக்களிப்பது கட்சி கட்டுப்பாட்டை மீறியது ஆகாதா? அது நியாயம்தானா?

பதில்:- இங்கு நாங்கள் முன் வைப்பது நல்ல நிர்வாகம், சிறந்த வேட்பாளர் என்பதை மட்டும்தான். உள்ளாட்சிகள் என்பது மக்கள் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பது. இதில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நினைக்க முடியாது. தேர்தல் முடிவுகள் வெளி வந்தவுடனேயே ஒரு கட்சியில் போட்டியிட்டு வென்றவர்கள் இன்னொரு கட்சியில் போய் சேர்ந்ததையெல்லாம் பார்க்க முடிந்தது. அதை எல்லா கட்சிகளும் ஏற்று கொண்டனர். எனவே நாங்கள் சொல்வது நாகர்கோவில் மாநகர மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் தேர்தல் மேயர் தேர்தல். எனவேதான் இந்த தேர்தலில் இறங்கி இருக்கிறோம்.

கேள்வி:- பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் தி.மு.க. மேயர் வேட்பாளரை அறிவிக்க இருக்கும் நிலையில், நீங்களும் வேட்பாளரை அறிவிக்கிறீர்கள். உங்கள் வேட்பாளர் மிகச்சிறந்த வேட்பாளர் என்றால் தேர்தலில் அவரை முன்னிலைப்படுத்தி மக்களை சந்தித்திருக்கலாமே?

பதில்:- மேயர் தேர்தல் மறைமுக தேர்தலாக அறிவிக்கப்பட்டது. முதலில் கவுன்சிலர்கள் தேர்தல்தான் நேரடியாக நடத்தப்பட்டது. தி.மு.க.வை பொறுத்தவரை அவர்கள் கட்சிக்குள்ளேயே யார் மேயர் வேட்பாளர் என்பதை முடிவு செய்துதான் தேர்தல் பணியை செய்தார்கள். ஆனால் நாங்கள் தேர்தல் முறைப்படி தேர்தலை அணுகினோம். எனவே மேயர் வேட்பாளரை அறிவிக்கவோ, முன்னிலைப்படுத்தவோ இல்லை. அவ்வாறு முன்னிலைப்படுத்தி இருந்தால் நிச்சயம் இந்த தேர்தலின் முடிவு என்பது வேறு விதமாகத்தான் அமைந்திருக்கும்.

கேள்வி:- இந்த மாநகராட்சியை பொறுத்தவரை முதல் மேயர் பதவி ஏற்க உள்ளார். எனவே அந்த பதவியை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதற்காக பா.ஜனதா போராடுகிறதா?

பதில்:- அப்படி இல்லை. போட்டியின்றி ஒருவர் தேர்வாக கூடாது என்பதற்காகத்தான். போட்டியின்றி தேர்வு செய்யப்படும் அளவுக்கு காந்தி, காமராஜர் போன்றவர்கள் களத்தில் நிற்கவில்லை.

நாங்கள் சொல்வது, நாங்கள் அறிவித்த வேட்பாளருக்கு நிகரான வேட்பாளர் யாரும் இல்லை என்பதுதான். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எங்களது வேட்பாளரின் நிர்வாகத்தை 10 ஆண்டுகளாக இந்த மாநகர மக்கள் நேரிடையாக பார்த்து இருக்கிறார்கள். அவர் நேரடி தேர்வில் வெற்றி பெற்று வந்தவர். மக்களின் ஆதரவை ஏற்கனவே பெற்ற நபர். அப்படிபட்ட வேட்பாளர் வேறு எந்த கட்சியிலும் இல்லையே?

இதற்கு முன்பும் இந்த நகராட்சியில் தலைவர்களாக தர்மராஜ், கிறிஸ்டோபர், அசோகன், சாலமன் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய நிர்வாகங்களையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யாரும் இப்போது மேயருக்காக களத்தில் நிறுத்தப்படவில்லை.

அதுமட்டுமல்ல தற்போது போட்டி நடைபெறும் 21 மாநகராட்சிகளிலும் எந்த மாநகராட்சியிலும் பா.ஜனதா ஆட்சி செய்தது இல்லை. இந்த மாநகராட்சியில்தான் 2 முறை ஆட்சி செய்துள்ளது. எனவேதான் அந்த ஆட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கிறோம்.

கேள்வி:- இதுவும் குதிரை பேரத்துக்குத்தானே வழிவகுக்கும். அந்த வழியை பா.ஜனதாவும் பின்பற்றுகிறதா?

பதில்:- அப்படி ஒரு எண்ணம் கடுகளவும் இல்லை. நான் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற அந்த மாதிரி செயல்களில் ஒரு போதும் ஈடுபட்டது கிடையாது. அதை தடுக்க வேண்டும் என்பதில்தான் தீவிரமாக இருப்பவன். பேரத்தில் உடன்பாடு இல்லை. பெயர் வாங்க வேண்டும் என்பதில் உடன்பாடு உண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.