94 குடும்பம்; 94 வீடுகள்! – முடிவுக்கு வந்த, 'சர்க்கஸ்' கலைஞர்களின் 50 வருட வாழ்வாதாரப் பிரச்னை

கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் ஊராட்சியில் இருக்கும் குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு, வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, சர்க்கஸூக்கு வாய்ப்பில்லாதபோது, கிடைத்த கூலி வேலைகளை செய்வது என்று 94 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

குந்தாணிப்பாளையத்தில் உள்ள கூடாரங்கள்

‘சொந்தமாக இடமில்லை. வீட்டுக்கு வழியில்லை’ என்று கடந்த 50 வருடங்களாக அல்லாடி வந்த அந்த மக்களின் துயர், துடைக்கப்பட்டிருக்கிறது. அந்த 94 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு அரசு சார்பில் சொந்தமாக வீடுகளும் கட்டித்தரப்பட இருப்பதால், 50 ஆண்டுகளால பிரச்னை முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கரூர் டு ஈரோடு சாலையில் இருக்கும் நொய்யல் அருகில் இருக்கிறது இந்த குந்தாணிப்பாளையம். அங்குதான், இந்த மக்கள் வசிக்கிறார்கள். ஆரம்பத்தில், ரெக்கார்டில் பாடல்களை ஒலிக்கவிட்டு, வீதிகளில் ரெக்கார்டு டான்ஸ் ஆடி பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால், சினிமா, வீட்டுக்கு வீடு டி.வி என்று வந்தபிறகு, அவர்களின் தொழில் நலிவடைந்தது. அதனால், ஆடு, ஒட்டகம், குதிரை என்று வைத்துக்கொண்டு சிறிய அளவில் ஊர் ஊராக சென்று ‘டேரா’ போட்டு, சர்க்கஸ் வித்தைக் காட்டும் தொழிலுக்கு மாறினர். வருடம் முழுக்க தமிழகம் முழுக்க சுற்றினாலும், மழைக்காலத்தில் தங்க, குந்தாணிபாளையத்துக்கு வந்துவிடுவார்கள். அங்கே வீடு இல்லாததால், கூடாரம் அமைத்து அதில் வாழ்ந்து வந்தனர்.

கூடாரத்துக்குள் சென்று பார்க்கும் ஆட்சியர்

கடந்த, 50 வருடங்களாக சொந்த பட்டா, வீடு உள்ளிட்ட விசயங்களுக்காக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அங்கு பிரசாரத்துக்கு சென்ற செந்தில் பாலாஜியிடம் இந்த மக்கள், அந்த கோரிக்கையை வைக்க, அவரும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த அடிப்படையில், குந்தாணிப்பாளையத்தில் வசிக்கும் 94 குடும்பங்களைச் சேர்ந்த, 358 நபர்கள் வசிப்பதற்கு இலவச வீட்டுமனை வழங்க முடிவெடுக்கப்பட்டு, கடந்த கடந்த டிசம்பர் மாதம் செந்தில் பாலாஜியால் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ‘இடம் கிடைத்தது; வீடு என்னாச்சு?’ என்று அந்த மக்கள் கோரிக்கை வைக்க, அதுவும் நிறைவேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. குந்தாணிப்பாளையத்தில் இவலச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட அனைவருக்கும் அரசின்திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு கட்டித்தரவும், அந்தப்பகுதியில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதரப்படவும் இருக்கிறது. இதனால், அந்த மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், இலவச பட்டா வழங்கப்பட்டுள்ள பகுதியினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கூடாரங்களுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், ‘இன்னும் ஒரு வருடத்திற்குள் உங்கள் அனைவருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவனிடம் விசாரிக்கும் ஆட்சியர்

அதேபோல், அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். இந்தப்பகுதியிலேயே ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலகம் அமைத்து, அதில் உங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார். அதோடு, “உங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல், அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். குறிப்பாக, பெண்குழந்தைகளை 21 வயதிற்கு முன்பு திருமணம் செய்து வைக்காமல், அவர்களை கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நான் உங்களுக்கு வைக்கின்றேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அப்போது, அந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ‘இப்பகுதிக்கு நல்ல பெயரை நீங்களே சூட்டுங்கள்’ என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். உடனே அவர், ‘கலைஞர் நகர்’ என்ற பெயரை பரிந்துரைத்ததோடு, ‘கலைஞர் என்ற சொல், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அவர்களையும் குறிக்கும், சர்க்கஸ் கலைஞர்களான உங்களையும் குறிக்கும். எனவே, ‘கலைஞர் நகர்’ என்ற பெயர் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்று தெரிவித்தார். அந்த மக்கள் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டனர்.

சர்க்கஸ் ஒட்டகங்கள்

இதைத்தவிர, மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கும்விதமாக, இந்த பகுதிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் குடிநீர்க்குழாய் அமைக்கும் பணியும், ரூ. 9.98 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதேபோல், ரூ.3.50 லட்சம் மதிப்பில் நீரேற்றும் மேட்டார் அமைக்கும் பணியும், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், குந்தாணிப்பாளையத்தில் சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளும் அமைத்துதரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் பேசினோம்.

“ஊர் ஊரா போய் நாடோடி மாதிரி பொழப்பு நடத்திக்கிட்டு இருந்தோம். எங்களுக்கு சொந்த ஊர்னு குந்தாணிப்பாளையம் இருந்தாலும், சொந்த இடம், வீடு இல்லாமல், கூடாரம் அமைச்சு மழை, காத்துக்காலங்களில் அல்லாட்டமாக வாழ்ந்து வந்தோம். லேசா மழை பேஞ்சாலும், உள்ளார தாரை தாரையா மழைத்தண்ணி கூடாரத்தை பொத்துக்கிட்டு ஊத்தும். லேசாக காத்து அடிச்சாலே கூடாரம் பிச்சுக்கிட்டு காத்துல பறக்கும். அந்த நேரத்துல மனசு நொறுங்கிரும் சார். இன்னொருபக்கம், டி.வி, சினிமா, ஆர்கெஸ்ட்ரா, செல்போன்னு பல விசயங்களால எங்க பொழப்பு முன்ன மாதிரி இல்லை. நாங்க ஊர் ஊரா போய் சம்பாதிப்பது, எங்ககிட்ட இருக்கிற குதிரை, ஒட்டகம், ஆடு, நாய் போன்ற வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுக்கவே பத்தாது. அதுவும், கடந்த இரண்டு வருஷமா கொரோனா பிரச்னையால ஊரை விட்டு போக முடியலை. வருமானத்துக்கு வழியில்லை. இதனால், கொத்தனார், சித்தாள், வயக்காட்டு வேலைனு இதுவரை பழக்கப்படாத, கிடைக்குற வேலைகளுக்கு போய்கிட்டு இருக்கிறோம்.

மோகன்ராஜ்

சொந்த இடம், வீடு இல்லாததால், எங்களை யாரும் மனுஷனாகூட மதிக்கமாட்டாங்க. வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தோம். இந்த நிலையில்தான், எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைக்குற மாதிரி, இரண்டு மாசத்துக்கு முன்னாடி அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களுக்கு பட்டா கிடைக்க ஏற்பாடு செஞ்சார். அடிப்படை வசதிகளும் செஞ்சு தந்தாங்க. இப்போ, வீடும், வேலைக்கு வழிபண்றதாவும் கலெக்டர் சாரு சொல்லியிருக்கிறார். எங்க கூடாரத்துக்குள்ள எல்லாம் நுழைஞ்சு வந்து பார்த்துட்டு, ‘இதுலயா இத்தனை வருஷம் வாழுறீங்க?’னு கேட்டார். இப்பதான், ‘நாங்களும் மனுசங்கதான். எங்களுக்கும் சொந்தமா இடம், வீடெல்லாம் இருக்கு’னு எல்லோர்கிட்டயும் கத்தி சொல்லணும்னு போல இருக்கு. இதுக்கெல்லாம் காரணமான அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டவர்களை காலத்துக்கும் மறக்கமாட்டோம்” என்றார் உணர்ச்சி மேலிட!.

உயிரை பணையமாக வைத்து, அந்தரத்தில் பல்டியடித்து நம்மை மகிழ்விக்கும் இந்த சர்க்கஸ் கலைஞர்கள், இனியாவது மகிழ்ச்சியாக வாழட்டும்!.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.