அரசியல் ஆதரவு கொடுங்கள்… இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்

கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷிய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும் ரஷிய படைகள் தாக்குகின்றன. 
உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்தில் இணைந்த பொதுமக்களுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். உக்ரைன் அதிபர் தனது மாளிகையை விட்டு வெளியேறி ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளார். அங்கிருந்தபடி ரஷிய தாக்குதல் தொடர்பான தகவல்களையும் மற்ற உத்தரவுகளையும் வெளியிட்டவாறு உள்ளார்.
ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ரஷியா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஐ.நா. சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றது. இந்தியாவுடனான சுமுகமான உறவு தொடரும் என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்து, அரசியல் ஆதரவு கேட்டுள்ளார். 
போரினால் உக்ரைனில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு உக்ரைன் அதிபரிடம், பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும், வன்முறையை விட்டு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர், இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க உக்ரைனின் உதவி தேவை என்று கேட்டுக்கொண்டார். அமைதியான முறையில் நிலைமையை கொண்டு செல்ல இந்தியாவின் பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று மோடி வாக்குறுதி அளித்துள்ளார். 
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அப்போது,  உக்ரைனை விரட்டும் ரஷியாவின் ஆக்கிரமிப்பின் போக்கைப் பற்றி தெரிவித்தேன். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் மண்ணில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பாளரை ஒன்றாக சேர்ந்து தடுத்து நிறுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.