டெல்லியில் புதிய தளர்வு: இனி காரில் செல்ல மாஸ்க் அணிய தேவையில்லை

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி அரசு முன்னதாக காரில் தனியாக செல்பவர்கள் மட்டும் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவித்திருந்தது. மேலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், காரில் தனியாக செல்பவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விலக்கு இன்னும் அமலில் இருப்பது ஏன் என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், தேசிய தலைநகர் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி காரில் கூட்டாக சென்றாலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வழங்கப்படாது எனவும், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.2000-ல் இருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. ரஷியாவுக்கு கண்டனம், உக்ரைனுக்கு ஆதரவு… உலகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.