மருத்துவ கல்வியில் பங்கேற்க தனியாருக்கு பிரதமர் அழைப்பு| Dinamalar

புதுடில்லி-”நாட்டில், மருத்துவ கல்வித் துறையில் ஆர்வமாக பங்கேற்க வேண்டும்,” என, தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

பார்லிமென்டில் கடந்த ௧ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜட்டில் இடம் பெற்றுஉள்ள சுகாதாரத் துறைக்கான அம்சங்கள் பற்றி நடந்த ‘வெபினார்’ எனப்படும் இணைய வழி கருத்தரங்கில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:சுகாதாரத் துறையுடன் சேர்த்து மக்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக பட்ஜெட்டில் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

மொழி பிரச்னை

நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை அதிகரித்தல், ஆராய்ச்சியை ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நம் குழந்தைகள் படிப்புக்காக, முக்கியமாக மருத்துவ படிப்புக்காக சிறிய நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு மொழி பிரச்னை இருந்தும், அவர்கள் தொடர்ந்து செல்கின்றனர். இதனால், நம்முடைய கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.

இதனால், தனியார் நிறுவனங்கள் மருத்துவ கல்வித்துறையில் பெரிய அளவில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் சிறந்த கொள்கைகளை, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக, உலகளவில் தேவைக்கு ஏற்ப ஏராளமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை இந்தியாவால் உருவாக்க முடியும். நம் டாக்டர்கள் பலர் தங்கள் பணியின் வாயிலாக நாட்டின் பெருமையை உயர்த்தி உள்ளனர். இதற்கு, கொரோனா தடுப்பூசியே சரியான உதாரணம். மருத்துவ வசதிதடுப்பூசி இயக்கம், நாட்டின் சுகாதாரத்துறையின் வலிமையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

latest tamil news

நாட்டில் ௧.௫ லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தற்போது, ௮௫ ஆயிரம் மையங்களில் உடல் பரிசோதனை, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரிய நகரங்களை தாண்டி, கிராமப்புறங்களிலும் சுகாதார உள்கட்டமைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம்.’ஒரே இந்தியா; ஒரே சுகாதாரம்’ என்ற நோக்கத்தோடு, மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

இதனால், நாட்டின் தொலைதுாரத்தில் உள்ள மக்களுக்கும், தரமான மருத்துவ வசதி கிடைக்கும். தரமான சுகாதார உள்கட்டமைப்பு என்பது பெரிய நகரங்களில் மட்டும் இருக்கக்கூடாது. மாவட்ட அளவிலும், கிராமங்களிலும் அத்தியாவசிய சுகாதார வசதிகள் கொண்டு வரப்பட வேண்டும். அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு தனியார் துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.