'பள்ளி என்னை கொன்றுவிட்டது'- பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

அரியானா மாநிலம் பரீதாபாத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் மாணவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின் இதுகுறித்து போலீஸ் அதிகாரி அர்ஜூன் துந்தரா கூறியதாவது:-

மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட இடத்தில் சோதனை செய்தபோது, கடிதம் ஒன்று சிக்கியது. அதில், பள்ளி என்னை கொன்றுவிட்டது என மாணவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அன்புள்ள அம்மா, நீங்கள் இந்த உலகிலேயே சிறந்த அம்மா. என்னால் தைரியமாக இருக்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். இந்த பள்ளி என்னை கொன்றுவிட்டது, குறிப்பாக தலைமை ஆசிரியை உள்பட உயர் அதிகாரிகள் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். பலர் என்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அழைத்தார்கள்.

இந்த வெறுப்பு நிறைந்த உலகில் என்னால் வாழ முடியாது. நான் என்னால் முடிந்தவரை வாழ முயற்சித்தேன், ஆனால் வாழ்க்கை வேறு எதையாவது விரும்புவது போல் தெரிகிறது.

சமூகம் உங்களுக்கு பல விஷயங்களைச் சொல்லும், ஆனால் அவற்றைக் கேட்கவோ நம்பவோ வேண்டாம். நீங்கள் சிறந்தவர், நீங்கள் அற்புதமானவர், அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பாலியல் துன்புறுத்தல் மற்றும் எனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி குடும்பத்தினரிடம் சொல்லுங்கள். உறவினர்கள் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள்.

நான் பிழைக்கவில்லை என்றால், நீங்களே ஒரு புதிய வேலையைப் பெற்றுக் கொள்ளுங்கள், மேலும் ‘வரைவதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு தேவதை, இந்த பிறவியில் உங்களைப் பெற்றதற்காக நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன். நீங்கள் எல்லாவற்றையும் சரியாகவும் முடிந்ததையும் செய்தீர்கள், ஆனால், ஆம், நான் வலுவாக இல்லை, நான் பலவீனமாக இருக்கிறேன், மன்னிக்கவும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது புகார் அளித்தனர். தொடர்ந்து, தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. ரஷிய ராணுவம் கைப்பற்றிய செர்னோபில் அணு உலையில் கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.