ரூ.12,000 கோடி வருவாயினை கடந்த பதிவுத்துறை: அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு

சென்னை: ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோருக்கான 2022-ம் ஆண்டுக்கான ஜனவரி மாத பணி சீராய்வு கூட்டம் கடந்த பிப்.25-ம் தேதியன்று, காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இச்சீராய்வு கூட்டத்தில் ரூ.12,000 கோடி வருவாயை பதிவுத்துறை கடந்துள்ளதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் வருவாய் ரூ.931.03 கோடி ஈட்டப்பட்டுள்ளது; இது சென்ற நிதியாண்டில் (2021) ஜனவரி மாத வருவாயை காட்டிலும் ரூ.34.32 கோடி அதிகமாகும். 2021-22 நிதியாண்டில் ஜனவரி 2022 முடிய வருவாய் ரூ.10785.44 கோடி ஈட்டப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிப்.25-ம் தேதி முடிய வருவாய் ரூ.1217.00 கோடி என்ற நிலையில் 25.02.2022 அன்று வரை ரூ.12003.00 கோடி வருவாயாக பதிவுத்துறையில் ஈட்டப்பட்டுள்ளது.

அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) ஆகியோர் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோரும் தங்களுக்கு அனுப்பப்படும் குறைவு முத்திரைத் தீர்வைக்கான முன்மொழிவுகள் மீது உரிய களப்பணி மேற்கொண்டு நியாயமான முறையில் சட்டபூர்வமாக செயல்பட்டு உரிய மதிப்பினை உடனுக்குடன் வழங்க வேண்டுமெனவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் பா.ஜோதிநிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் .ம.ப.சிவன் அருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உதவிப்பதிவுத் துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவர் அலுவலகம், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.