ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள்..! <!– ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள்..! –>

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பெருமளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. 

ரஷ்யாவின் வங்கித் துறை வணிகத்தில் 80 விழுக்காட்டைக் கொண்டுள்ள முதல் 10 வங்கிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.அமெரிக்க நிதித்துறை அமைப்பின் கீழ் பரிமாற்றங்களைச் செய்ய ரஷ்யாவின் ஸ்பெர்வங்கிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விடிபி மற்றும் மூன்று வங்கிகளுக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் கேஸ்புரோம் எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனம் மேற்கத்திய சந்தைகளை அணுகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்துவதற்கான கருவிகள், தொழில்நுட்பங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள், விமான உதிரிப் பாகங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பிரிட்டன் வான்பரப்பு வழியாகச் செல்லவும், பிரிட்டனில் தரையிறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர்கள், கணினிகள், தொலைத்தொடர்புக் கருவிகள், தகவல் பாதுகாப்பு, லேசர்கள், சென்சார்கள் உள்ளிட்ட உயர்தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானவியல், தகவல் தொழில்நுட்பம், சுரங்கத் தொழில்களுக்கான பொருட்கள் ஏற்றுமதிக்கான அனுமதியைக் கனடா அரசு ரத்து செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. புடினுக்கும் லாவ்ரோவுக்கும் எதிராக அமெரிக்காவும், கனடாவும் தடை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரஷ்ய அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் 58 தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு எதிராகக் கனடா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் தொழிலதிபர்கள் 8 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 339 பேருக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறுமிடம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து பாரீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.ரஷ்யாவில் நடைபெறவிருந்த கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெறவிருந்த உலகக் கோப்பைப் பனிச்சறுக்குப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி பிளே ஆப் சுற்றில் ரஷ்ய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதில்லை எனப் போலந்து அறிவித்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.