பெங்களூரு : ”உக்ரைனில் இருந்து வந்துள்ள கர்நாடகாவினரை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கர்நாடக அரசே ஏற்பாடு செய்யும். அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவர்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக, அந்நாட்டுக்குள் சென்று ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர்.
இதனால் அங்கு சிக்கியுள்ள கர்நாடகாவினரை மீட்க, மாநில அரசு மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.எம்.பி.பி.எஸ்., படிக்க சென்ற மாணவர்கள், தங்களை காப்பாற்றி கொள்ள சுரங்க அறைகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க உதவும்படி பெற்றோர் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையில் இந்திய அரசின் ராஜதந்திரத்தால் உக்ரைனில் இருந்து, ரோமானியா நாட்டின் வழியாக விமானங்களில் மாணவர்கள் நேற்று மும்பை அழைத்து வரப்பட்டனர்.இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் நேற்று கூறியதாவது:உக்ரைன் மேற்கு பகுதியிலிருந்து மும்பை வந்துள்ள கர்நாடகாவினரை, பெங்களூரு அழைத்து வந்து, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி செய்யப்படும். உக்ரைனில் சிக்கியுள்ள கர்நாடகத்தவர்களின் பட்டியலை, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வட கிழக்கு பகுதியில் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கும்படியும், தேவையின்றி சாலைகளில் அலைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியர்களை மீட்க பாதுகாப்பான வழியை காண்பிக்கும்படி, ரஷ்ய பிரதமருடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். விரைவில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.சில மாணவ, மாணவியருடன் பசவராஜ் பொம்மை வீடியோ கால் மூலம் பேசி, தைரியமூட்டினார்.
Advertisement