தெருவில் வாக்கிங் போன அதிபர்.. செம தில்லு.. அந்த பேக்கிரவுண்ட் பில்டிங் பார்த்தீங்களா!

நான் சரணடைய மாட்டேன்.. எங்கும் தப்பி ஓடவும் மாட்டேன். சரணடையப் போவதாக வரும் செய்திகள் வதந்தி என்று
உக்ரைன் அதிபர்
விலாடிமிர் ஜெலின்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. உக்ரைன் படையினர் தொடர்ந்து தீரத்துடன் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் ஜெலின்ஸ்கி ரஷ்யப் படையினரிடம் சரணடையப் போவதாக செய்திகள் வெளியாகின.

இதனால் உக்ரைன் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம், ரஷ்யப் படையினரிடம் சரணடைந்தால் போர் நிற்குமே என்ற எண்ணமும் மேலோங்கியது. ஆனால் இந்த செய்திகளை ஜெலின்ஸ்கி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு வீடியோ போட்டுள்ளார். கீவ் நகரில் தெருவில் நின்றபடி ஒரு வீடியோவைப் பேசி அதை அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஜெலின்ஸ்கி கூறுகையில், நான் சரணடைய அழைப்பு விடுக்கவில்லை. சரணடையப் போவதாக ரஷ்யப் படைகளுக்குத் தகவலும் தரவில்லை. இதுபோன்ற செய்திகள் போலியானவை, பொய்யானவை. யாரும் நம்பாதீர்கள்.

இணையதளத்தில் நிறைய போலியான பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. நான் ராணுவத்திடம் போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எல்லாமே போலியானவை. நான் இங்கேயேதான் இருக்கிறேன். ஆயுதங்களை நாங்கள் கீழே போட மாட்டோம். எங்களது நாட்டை காப்பாற்ற தொடர்ந்து போரிடுவோம் என்று கூறியுள்ளார் ஜெலின்ஸ்கி.

கோரடெட்ஸ்கி ஹவுஸ்

40 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜெலின்ஸ்கிக்கு பின்னால் தெரியும் கட்டடத்திற்கு கோரடெட்ஸ்கி ஹவுஸ் என்று பெயர். இப்போது இந்த மாளிகை குறித்த தேடல் கூகுளில் அதிகரித்துள்ளதாம். இதுதான் அதிபரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகும். அதிபரின் அலுவலகத்திற்கு வெகு அருகில் இது உள்ளது.

நான் எதுக்கு ஓடணும்.. போக மாட்டேன்.. ஆயுதங்கள் கொடுங்க.. உக்ரைன் அதிபர் பிடிவாதம்!

போலந்து நாட்டுக் கட்டடக் கலைஞர் விலாடிஸ்லாவ் ஹோரடெக்கியின் கைவண்ணத்தில் உருவானது இந்த பிரமாண்ட மாளிகை. மிகுந்த பொருட் செலவில், மிகுந்த கலைநயத்துடன் கட்டப்பட்ட கட்டடம் இது. 1902ம் ஆண்டு இது திறக்கப்பட்டது. தனது சொந்தப் பணத்தைக் கொண்டு இதை ஹோரடெக்கி கட்டினார் என்பது முக்கியமானது.

உக்ரைன் நாட்டின் மிகச் சிறந்த கலைப் படைப்பாக இந்த கட்டடம் பாதுகாக்கப்படுகிறது. அந்த அளவுக்கு மிகப் பெரிய கலைக் கட்டடமாக இதை ஹோரடெக்கி கட்டியுள்ளார். சின்னச் சின்ன சிற்பங்களுடன் கூடியதாக மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட கட்டடமாக இது உருவெடுத்து கம்பீரமாக நிற்கிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இது அதிபரின் அதிகாரப்பூர்வ தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய ரஷ்ய படையெடுப்பால் இந்த மாளிகைக்கு ஏதாவது சேதம் நேரிடுமா என்ற அச்சத்தில் உக்ரைன் மக்கள் உள்ளனர். அதிபர் தங்கியிருக்கும் இடம் என்பதால் இப்பகுதியைக் காக்க உக்ரைன் படையினர் தீவிரமான கண்காணிப்பில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.