ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: மாஸ்க் அணிய தேவையில்லை – பொதுமக்கள் ஹேப்பி!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவது முகக்கவசம். அனைவரும்
முகக்கவசம்
அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முகக்கவசம் மூலம் உலகளாவிய கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என
டெல்லி
அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் பெரும்பாலான
கொரோனா கட்டுப்பாடுகள்
நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையிலான டெல்லி பேரழிவு மேலாண்மை ஆணையம் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது நாளை முதல் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. அத்துடன் தனியாக பயணம் செய்யும் ஓட்டுனர்களும் முகக் கவசம் அணிய தேவையில்லை எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஆனால், வாடகை கார்கள் மற்றும் இதர வாடகை வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுஇடங்களில் முக கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.2,000லிருந்து ரூ.500ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இத்தகைய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை 440 பேர் மட்டுமே கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா நேர்மறை விகிதம் 0.83 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஒரு நகராட்சி மண்டலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரச்சந்தைக்கு அனுமதி உட்பட சில கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. திருமணங்களில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும், மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.