குஜராத்தி மொழியில் ரீமேக்காகும் ஆண்டவன் கட்டளை
விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஆண்டவன் கட்டளை. காக்காமுட்டை மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் இந்த படம் குஜராத்தி மொழியில் தற்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதை ரீமேக் செய்து தயாரிக்கப் போகிறவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி கூழாங்கல், நெற்றிக்கண், ராக்கி, தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் ஆண்டவன் கட்டளை படத்தை குஜராத்தி மொழியில் இவர்கள் ரீமேக் செய்கின்றனர். படத்திற்கு சுப யாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் மனிஷ் சைனி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் குஜராத்தி நடிகர் மல்ஹார் தக்கார் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க, ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். இவர் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இவர்கள் இருவருடனும் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.