கையில் இருக்கும் உணவு 2 நாளில் தீர்ந்து விடும்- உக்ரைனில் தவிக்கும் தென்காசி மாணவர்கள் கண்ணீர் மல்க வீடியோ

கடையநல்லூர்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெருவை சேர்ந்த அக்பர்அலி மகன் அப்துல் அஜீம், பீர்முகம்மது மகன் ஜியாத், அமீனுத்தீன் மகன் அப்துர் ரஹ்மான், முகமது கனி மகன் முகம்மது நதீம், அட்டை குளம் தெருவை சேர்ந்த அஹ்மது அலீ-ஜுகைரா தம்பதியின் மகள் சல்வா அப்ரீன், சேக் உதுமான் மகன் கன்ஸுல் லாஹ் ஆகிய 6 மாணவர்கள் உக்ரைனில் கார்கிவ் தேசிய மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அவர்கள் அங்கு நடந்து வரும் போர் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர்.
தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே குண்டு மழை பொழிவதாக கூறும் இவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில், பிஸ்கட் இன்னும் 2 நாளில் முழுவதுமாக தீர்ந்து விடும் என்றும், அதன் பின்னர் உணவு கிடைக்காமல் போய்விடும் சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசிடம் பேசி எப்படியாவது தங்களை மீட்டு கொண்டு வாருங்கள் என மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் மாணவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி சல்வா அப்ரீனின் தாயார் ஜுகைரா கண்ணீர் மல்க கூறியதாவது :-
எனது மகள் நீட் தேர்வு எழுதி 300 மதிப்பெண் பெற்றார். இருப்பினும் தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைக்காததால் எனது மகளை உக்ரைனில் உள்ள தேசிய மெடிக்கல் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பி உள்ளேன்.
அங்கேயும் தற்போது போர் நடைபெறுவதால் எனது மகள் உயிருக்கு அச்சுறுத்தலான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. நான் எனது மகளின் வருகைக்காக காத்து இருக்கிறேன். இனிமேல் எனது மகளை உக்ரைன் நாட்டிற்கு படிக்க வைக்க அனுப்ப மாட்டேன்.
எனவே தமிழக முதல்-அமைச்சர் எனது மகளின் கனவை நிறைவேற்ற தமிழகத்திலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வால் எனது மகளின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.