Ukraine Russia crisis latest news in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தை பெலாரஸ் எல்லையில், இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் நடந்த லேட்டஸ்ட் நிகழ்வுகளைப் பார்ப்போம்.
SWIFT-ல் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு; சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் பதவியிலிருந்து புதின் இடைநீக்கம்
உக்ரைனுக்கு ஆதரவாக உலகளாவிய வங்கி தகவல் பரிவர்த்தனை சேவை (SWIFT) அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், சர்வதேச விளையாட்டு நிர்வாகக் குழுவான சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (IJF) கௌரவத் தலைவராக பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடைநீக்கம் செய்யப்பட்டார்
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய தூதுக்குழு பெலாரஸ் வருகை; நிராகரித்த உக்ரைன்
உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய தூதுக்குழு பெலாரஸ் வந்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்துள்ளதாகவும், தற்போது நெறிமுறை சிக்கல்களைத் தீர்ப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் பெலாரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், பெலாரஸில் பேச்சு வார்த்தை நடத்துவதை உக்ரைன் நிராகரித்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரு வீடியோ செய்தியில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான பேச்சு வார்த்தைக்கு வார்சா, பிராட்டிஸ்லாவா, இஸ்தான்புல், புடாபெஸ்ட் அல்லது பாகுவை மாற்று இடங்களாக கூறியதோடு, மற்ற இடங்களும் சாத்தியம் என்று கூறினார், ஆனால் பெலாரஸில் பேச்சுவார்த்தை என்ற ரஷ்யாவின் தேர்வை உக்ரைன் ஏற்கவில்லை என்பதை உக்ரைன் அதிபர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படியுங்கள்: எரிபொருள் விநியோக மையங்களில் தாக்குதல்: உக்ரைனில் குழந்தைகள் உள்பட 198 பேர் பலி
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் நுழைந்தது ரஷ்யா படை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் ஏற்கனவே தலைநகர் கிவ்வுக்குள் நுழைந்துள்ள நிலையில், இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் நுழைந்தது.
ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடை விதிக்கப்படுவது குறித்து விவாதிக்க முடிவு
உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடை விதிக்கப்படுவது, ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர்களால் விவாதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறினார். பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஏற்கனவே இந்த விமானங்களுக்கு தங்கள் வான்வெளியை மூடிவிட்ட நிலையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்று அதிகாரி மேலும் கூறினார்.
இதனிடையே இன்றுபின்லாந்து நாடு ரஷ்ய விமானங்களுக்கான வான்வழியை மூடியது. பின்லாந்து ரஷ்யாவுடன் 800 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
உக்ரைனுக்கான உலக நாடுகள் உதவி
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு மேலும் பாதுகாப்புப் பொருள் உதவிக்கு செக் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா கூறினார். செக் அரசாங்கம் நேற்று 188 மில்லியன் மதிப்புள்ள இயந்திர துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்ற இலகுரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்பியது.
இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை, கியேவ் மற்றும் மாஸ்கோவுடனான அதன் உறவுகளை சோதிக்கும் மோதலில் தனது அரசாங்கம் ‘நிதானத்துடனும் பொறுப்புடனும்’ தொடர்கிறது என்று கூறினார். மேலும், “உக்ரைன் குடிமக்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், மேலும் இரத்தக்களரி தடுக்கப்படும் என்று நம்புகிறோம்” என்று பென்னட் கூறினார். ‘நாங்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்கிறோம்’. நீர் சுத்திகரிப்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கூடாரங்கள் உட்பட 100 டன் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு இஸ்ரேல் அனுப்புகிறது என்றார்.
போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் 100 மில்லியன் டாலர் நிதி அளிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது
உக்ரைனுக்கு எதிரான போர் : 4300 வீரர்களை இழந்த ரஷ்யா
உக்ரைன் மீதான படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் சுமார் 4,300 படைவீரர்களை இழந்துள்ளன என்று துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய படையில் சுமார் 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்களை இழந்ததாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தாய் நாட்டிற்காக சண்டையிட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய உக்ரைன் ஆண்கள்
போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்
உடனே போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்துள்ள உக்ரைன் அரசு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துளளது. மேலும் உக்ரைன் மீதான போரை பொய்யான புகார் கூறி நியாயப்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் இடத்தை பறிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
கார்கிவைக் கைப்பற்றுவதற்கான ரஷ்ய முயற்சியை முறியடித்த உக்ரேனியப் படைகள்
ஞாயிறு அன்று கார்கிவ் நகரைக் கைப்பற்றும் ரஷ்ய முயற்சியை உக்ரேனியப் படைகள் முறியடித்துள்ளன என்று கார்கிவ் நகரின் கவர்னர் கூறியுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தை ரஷ்ய கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் கவர்னர் ஓலே சின்யெஹுபோவ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், “கார்கிவ் மீதான கட்டுப்பாடு முற்றிலும் எங்களுடையது! எதிரிகளிடமிருந்து நகரத்தின் முழுமையான வெளியேற்றம் நடக்கிறது. ரஷ்ய எதிரிகள் முற்றிலும் மனச்சோர்வடைந்துள்ளார்.
ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்
ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பெலாரஸ் எல்லையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் உக்ரைன் அதிபர் மாளிகை கூறியுள்ளது
ரஷ்யாவின் அணுசக்தி தடுப்புப் படைகள் தயார் நிலையில் இருக்க புதின் உத்தரவு
உக்ரைன் மீதான தனது படையெடுப்பு தொடர்பாக மேற்குலக நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், ரஷ்ய அணுசக்தி தடுப்புப் படைகளை தயார் நிலையில் இருக்க அதிபர் விளாடிமிர் புதின் கடும் உத்தரவிட்டுள்ளார்.
புதின் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி மற்றும் இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் தலைவருக்கு அணுசக்தி தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டார். உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மேற்கு நாடுகளுடனான பதட்டங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சுறுத்தலை அவரது உத்தரவு எழுப்பியது.