தரம்சாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர். இருவரும் விரைவாக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
அடுத்து வந்த, அசலங்கா 4 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து ஜரித் லியநாகே(9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் தசுன் சணகா களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 74 ரன்கள் (38 பந்துகள், 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு பக்கபலமாக நின்ற தினேஷ் சண்டிமால் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.