சென்னை பல்லாவரம் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், முறையாகப் பராமரிக்கப்படாத ஏசியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசி இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், அதன் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் யசோதா நகர் பகுதியில் வருபவர்கள் மோகன் – சங்கீதா தம்பதி. பூ வியாபாரம் செய்யும் இந்த தம்பதி சனிக்கிழமையன்று மாலை தங்களது 2 வயது பெண் குழந்தையான பிரஜீதாவை வீட்டின் அறையில் தனியாக படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, ஏசியை ஆன் செய்துள்ளனர். ஏசி இயங்கியதால் அறையின் கதவையும் மூடி வைத்துள்ளனர்.
மோகன் வெளியே சென்றிருந்த நிலையில், சங்கீதா வீட்டு வாசலில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் கடந்திருந்த நிலையில், அறைக் கதவின் இடுக்கில் இருந்து புகை வந்ததைப் பார்த்த சங்கீதா, அதிர்ச்சியடைந்து கதவுகளைத் திறந்துள்ளார்.
சரியாக வாயில் கதவுகளுக்கு மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பிலிட் ஏசி இயந்திரம் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால், அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்தத் தீ வீடு முழுக்க பரவி, அனைத்துப் பொருட்களும் பற்றி எரிந்துள்ளன.
உள்ளே இருந்த படுக்கையும் பற்றி எரிய, அதன் மீது படுத்திருந்த குழந்தை பிரஜீதாவும் சேர்ந்தே எரிந்து கருகியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.தீயணைப்புத்துறையினரின் ஆய்வில் ஏசி இயந்திரத்தின் மின் சுற்றில் கோளாறு ஏற்பட்டு, தீப்பற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. முறையாக பராமரிக்கப்படாததால் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.
பொதுவாக ஏசி இயந்திரங்கள் அதிகளவிலான மின்நுகர்வு தன்மை கொண்டவை என்று கூறும் நிபுணர்கள், அதற்குப் பொருத்தமான திறனும் அளவும் கொண்ட ஒயர்கள், மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். ஏசி இயந்திரத்திலுள்ள காற்று வடிகட்டிகளை அடிக்கடி கழற்றி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம் என்று கூறும் நிபுணர்கள், அவ்வாறு சுத்தம் செய்யாவிட்டால் அதன் மின் நுகர்வு அதிகரித்து, ஒயர்கள் அதீத சூடாகி சேதமடைந்து தீப்பற்றும் வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.
கோடை காலத்தில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஏசி இயந்திரம் சூடாகி, அதன் மின் இணைப்புகள் தளர்வடையும் வாய்ப்பு உள்ளதாகவும் அதன் காரணமாகவும் தீப்பொறி ஏற்பட்டு தீப்பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது கோடை காலம் தொடங்கும் சமயத்தில், அனுபவமுள்ள ஏசி மெக்கானிக்குகளை அழைத்து வந்து, ஏசி எந்திரத்தை பரிசோதனை செய்வது மிக மிக அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.