உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால், உக்ரைனில் ராணுவத்தினர் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மட்டுமல்லாமல், ரஷ்ய மக்களும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளது. போரில் ரஷ்ய ராணுவத்தினர் 5300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ரஷ்யாவின் 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளன எனவும் உக்ரைன் தெரிவித்திருக்கிறது. மேலும் 191 பீரங்கி மற்றும் 816 கவச வாகனங்கள், 2 கப்பல்கள், படகுகள் வீழ்த்தப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.