தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாமகவை வலுப்படுத்தும் பணியை அக்கட்சியினர் தொடங்கியுள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், அதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து வர உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் பாமகவை இப்போதிலிருந்தே வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாகர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 20க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு, பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போதே, டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடம் தோல்விக்கான காரணம் என்ன என்று விசாரித்து கட்சிப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று கூறினார்.
அதே போல, 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாமக மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றபோது கட்சி நிர்வாகிகளை கடுமையாக கண்டித்தார். அனைத்து இடங்களிலும் பாமகவை வெற்றிபெறச் செய்ய பாமக நிர்வாகிகள் களத்தில் திண்ணைப் பிரசாரம் செய்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. ஆனால், பாமக் இந்த தேர்தலிலும் சிறப்பாக செயல்படவில்லை.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாமகவின் செயல்பாடுகள் குறித்தும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக எதிர்பார்த்த வெற்றி பெறாததற்கு காரணம் என்ன என்று நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டு துளைத்து விசாரித்திருக்கிறார்.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பாமக கிளை இல்லாத கிராமமே இருக்கக் கூடாது, பாமக பூத் ஏஜென்ட் இல்லாத ஓட்டுச் சாவடி இருக்கக் கூடாது” என்று டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியதாகக் கூறினார்.
திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்தந்த மாவட்டங்களில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க, டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை முதல், மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பாமகவின் பொதுவான செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர், பாமகவை மேலும் வளர்க்க அறிவுறுத்தினார்.
தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, மேற்கில் ஈரோடு உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட இடங்களில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அது போதாது என்று பாமக நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாமக நிர்வாகிகள் வருங்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்குமாறு டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். அப்போது சில நிர்வாகிகள் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளின் பணபலம் பல வார்டுகளில் பாமகவின் வெற்றி வாய்ப்புகளைத் தகர்த்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் மந்தமாக செயல்பட்டதற்கான காரணங்கள் குறித்து, டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கேள்வி கேட்டு விசாரித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“