‘திருத்தணி முருகன் கோவிலில் கடைநிலை ஊழியர் பணிக்கு அப்ளை செய்துருந்தேன். அந்த பணியில், மூன்றாம் பாலினத்தவருக்கு என தனி இட ஒதுக்கீடு இல்லாததால் என்னுடைய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது!’ என்கிறார், திருநங்கை அகல்யா. இது குறித்து அவரிடம் பேசினோம்.
“என்னோட சொந்த ஊர் திருத்தணி. பன்னிரண்டாம் வகுப்பில் 968 மதிப்பெண் வாங்கினேன். காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது என்னோட உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொடர்ந்து படிக்க முடியாம படிப்பை நிறுத்திட்டேன். எங்க வீட்டில் என்னை ஏத்துக்காததனால வீட்டைவிட்டு வெளியேறி என்னுடைய திருநங்கை சமூகத்தில் சேர்ந்தேன். பிறகு, சர்ஜரி பண்ணிகிட்டு திருநங்கையாக வாழ ஆரம்பிச்சேன்.
என்னோட பொழப்புக்காக கடை ஏறிட்டு இருந்தேன். படிச்சிருக்கோம்.. நம்ம படிப்புக்கு ஏற்ற வேலையை தேடுவோம்னு நானும் பல இடங்களுக்கு வேலை கேட்டு போனேன். எங்கேயும் வேலை கிடைக்கலை. திருத்தணியில் இருக்கிற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடைநிலை ஊழியர் வேலைக்கு அப்ளிகேஷன் கொடுக்குறாங்கன்னு கேள்விபட்டு நானும் அப்ளை பண்ணி இருந்தேன். இது நிரந்தரமான வேலை என்பதால் இந்த வேலை கிடைச்சா நம்முடைய வாழ்வாதாரம் மாறும்னும், என் கூட இருக்கிற மற்ற இளம் திருநங்கைகளுக்கு என்னால் இயன்ற உதவி பண்ணலாம்னும் நினைச்சிட்டு இருந்தேன்.
கோவிலில் இருந்து கால் லெட்டர் வந்துச்சு. நேர்முகத்தேர்வில் நானும் கலந்துகிட்டேன். அங்கே என்கிட்ட கோவில் நிர்வாகம் சார்பில் மூணு பேர் கேள்வி கேட்டாங்க. கேள்வி கேட்டவங்க கூட நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கேன்னு என்னை பாராட்டி தான் பேசினாங்க. அந்த வேலைக்கான தகுதி எட்டாம் வகுப்பு தான்! நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன் என்பதால் கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு நம்பினேன்.
நவம்பர் மாதம் நேர்முக தேர்வுக்கு பிறகு வேலை தொடர்பான எந்த தகவலும் வரல. கோவிலில் விசாரிச்சப்போ 14 காலியான இடங்களில் கிட்டத்தட்ட 7 இடங்கள் நிரம்பிடுச்சு. தொடர்ந்து ஆட்கள் தேர்வு பண்ணிட்டு தான் இருக்காங்கன்னு சொன்னாங்க. இதுதொடர்பா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்திக்கிறதுக்காக சென்னைக்கு வந்தோம். அவர்கிட்ட இதுபற்றி பேசியபோது, ‘இதெல்லாம் பெரிய கோவில்.. இதுக்கு நிறைய போட்டி இருக்கும்மா.. சின்ன கோவில் ஏதாவது இருந்தா பார்க்கலாம்னு’ சொல்லிட்டு வேகமா எங்களை கடந்து போயிட்டார்.
அவர் சின்ன கோவிலில் உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்னு உறுதியா சொல்லியிருந்தாலாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும். போட்டி நிறைய இருந்தால் என்னங்க.. ஒரு வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு இத்தனை இடம், பெண்களுக்கு இத்தனை இடம்னு இட ஒதுக்கீடு பண்ணுவீங்க தானே? அப்படி மூன்றாம் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீடு ஏன் இந்த வேலையில் இல்லைன்னு தான் கேட்கிறேன். மூன்றாம் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் 5 பேர் அப்ளை பண்ணி இருக்கீங்க.. அதில், ஒருவருக்கு தான் வேலை கொடுக்க முடியும்னு சொன்னா அது பிரச்னையில்லை. எங்களுக்கென எதுவுமே கொடுக்காம போட்டி நிறைய இருக்குன்னு சொன்னா நாங்க என்ன பண்றது?
கடை ஏறும்போது பலரும் கை,கால் நல்லா தானே இருக்கு.. உழைச்சு சாப்பிடுங்கன்னு சொல்றாங்க. சரி, தனியாரில் தான் நமக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுதுன்னு அரசாங்கத்தை நம்பினா அவங்களும் இப்படி எங்களை ஒதுக்கினாங்கன்னா நாங்க என்னதான் பண்றது? இப்படி வாய்ப்புக்காக எங்க வாழ்நாள் முழுவதும் போராடிகிட்டே இருக்கணுமா?!’ என்றார்.
இதுபற்றி அரநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டோம். “திருத்தனி கோயிலில் மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா? என விசாரித்து விட்டு லைனில் வருகிறேன்” என்று நகராட்சித் தேர்தலுக்கு முன்பாக சொன்னார். அதன் பிறகு தேர்தலில் பிசியாக இருந்ததால் பேச முடியவில்லை. அதனால் இன்று மீண்டும் பேசினோம். “இன்னும் விசாரிக்கவில்லை, விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்” என்று அதே பதிலையே மீண்டும் குறிப்பிட்டார்.