புதுடில்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு 4 மத்திய அமைச்சர்களை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‛ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று (பிப்.,27) அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 4 அமைச்சர்கள் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய அமைச்சர்களான ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா மற்றும் மோல்டாவா நாட்டிற்கும், கிரண் ரிஜிஜூ ஸ்லோவேக்கியா நாட்டிற்கும், ஹர்தீப் சிங் புரி ஹங்கேரி நாட்டிற்கும், வி.கே.சிங் போலாந்து நாட்டிற்கும் செல்கின்றனர்.
Advertisement