உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, மார்ச் 3 ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையொட்டி, தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில்
பிரதமர் மோடி
பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “`நான் மரணிக்க வேண்டும் எனறு எதிரிகள் சிலர் வாரணாசியில் சிறப்புப் பூஜைகள் நடத்துகின்றனர். இந்த செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
அரசியலில் சிலர் எப்படியெல்லாம் தரம் தாழ்ந்து செல்கின்றனர் என்பதற்கு இதுபோன்ற செயல்கள்தான் சான்று. நான் சாகும்வரை காசியை விட்டு செல்லமாட்டேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.
தேர்தல் பிரசார மேடையில் அவர் எதிரிகள் சிலர் என்று குறிப்பிட்டு, அவர்கள் தான் சாக வேண்டுமென யாகம் நடத்துவதாக பகிரங்கமாக கூறியுள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டி, கடந்த மாதம் நாடு முழுவதும் கோவில்களில் பாஜகவினர் பிரார்த்தனை மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.