உக்ரைனில் இருந்து வந்த 6-வது சிறப்பு விமானம்: 21 தமிழக மாணவர்கள் உட்பட 280 பேர் மீட்பு

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு கிளம்பிய ஆறாவது சிறப்பு விமானம் இன்று மாலை 6.00 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. இதில், 21 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 280 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் நாட்டில் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதையடுத்து இந்தியா உள்ளிட்டப் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து கல்வி உள்ளிட்ட பல காரணங்களால் உக்ரைனில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். இந்திய மாணவர்கள் அனைவரும் மத்திய அரசின் உதவியால், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை முதல் இந்தியா திரும்பத் துவங்கி உள்ளனர். இதுவரை ஆறு விமானங்களில் சுமார் 1,800 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக, ஆறாவது விமானம் இன்று மாலை 6.00 மணிக்கு டெல்லி வந்தடைந்தது.

இதில், தமிழகத்தின் 6 மாணவர்கள் மற்றும் 15 மாணவியர் டெல்லி வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே உஸ்கரண்ட் தேசிய மருத்துவப் பல்கலைகழகத்தின் மாணவர்கள். இது மேற்குப்பகுதி உக்ரைனின் உஸ்கரண்ட் நகரில் எல்லையிலுள்ள இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கோயம்புத்தூர் காந்திநகரை சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவி ஆஷிர் அனிஷ்பின் நிஸா கூறும்போது, “மத்திய அரசால் ஹங்கேரி எல்லை வழியாக இன்று தமிழகத்தை சேர்ந்த 21 பேரும் இந்தியா வந்து சேர்ந்தோம். இதற்காக, நம் இந்திய அரசு மற்றும் தமிழக அரசிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லி வந்து சேர்ந்த பின் தான் எங்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது” எனத் தெரிவித்தார்.

இவர்கள் அனைவருக்கும் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் மூலம் உரிய வசதிகள் செய்து தரப்படுகிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி ஆகியோர் மீட்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உக்ரைன் நாட்டிலிருந்து புதுடெல்லிக்கு இதுவரை தமிழக மாணவர்கள் 43 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செல்வதற்கு விமான டிக்கெட்கள் வழங்கி தேவையான உணவுகள் மற்றும் இதர வசதிகள் செய்து கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பணிகளை மேற்கொள்ள புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் மூலம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று டெல்லி வந்த தமிழக மாணவர்கள் 21 பேரும் இரவு 11 மணி சென்னை விமானத்தில் புறப்படுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.