ஹைதராபாத்: ஐபேக் நிறுவனர் மற்றும் பிரபல தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும். இதன்தொடர்ச்சியாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் சந்திரசேகர் ராவ். முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவருமான எச்.டி.தேவேகவுடா, மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சில தினங்கள் முன் சந்தித்து பேசினார். இதற்கு மத்தியில் கடந்த வாரம் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தாக சொல்லப்படுகிறது.
தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் சந்திரசேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, அதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே அவரை ராவ் சந்தித்து இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரின் சந்திப்பை சில தெலுங்கு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், இருவர் தரப்பிலும் எந்த முறையான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை கடந்த காலங்களில் தமிழகத்தில் முக ஸ்டாலின், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்காக தேர்தல் பணியாற்றினார். இதில் அவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர் என்ற அடிப்படையில் கேசிஆர் பிரசாந்த் கிஷோரை சந்திருக்க கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.