கிறிஸ்ட்சர்ச்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது.ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நியூசிலாந்து அணியின் காலின் டி கிராண்ட்கோம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது. காலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆட தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்து 211 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் தென் ஆப்பிரிக்க அணியின் கெய்ல் வேரின்னே நிலைத்து நின்று விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவரை கட்டுப்படுத்த முடியாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 9 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்த போது தென் ஆப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது. கெய்ல் வேரின்னே 136 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
426 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்கள் மட்டுமே மீதம் இருக்க நியூசிலாந்து அணி வெற்றி பெற 338 ரன்கள் தேவைப்படுகிறது.