சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன்வரலாற்று நூலான “உங்களில் ஒருவன் பாகம் – 1” நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. நூலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். விழாவின் நிறைவாக முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் – உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘உங்களில் ஒருவன்’ என்றே பெயர் சூட்டி இருக்கிறேன்.
நீங்கள் அனைவரும் உங்களை விட உயரமான இடத்தில் கொண்டு போய் என்னை உட்கார வைத்தாலும் – நான் உங்களில் ஒருவன் தான். உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்!
இதனை வாசிப்பதன் மூலமாக உங்களில் ஒருவனாக நான் எப்படி முளைத்தேன் என்பதை முதன்முதலாக நீங்கல் அறியப் போகிறீர்கள். எனது இருபத்து மூன்று வயது வரையிலான வாழ்க்கைதான் இந்தப் புத்தகம்.
தலைவர் கலைஞர் உட்கார்ந்த தலைவர் நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நினைக்கவில்லை. முதல்வராக இருந்த அண்ணா அவர்கள் அவரது காரை அனுப்பி என்னை அழைத்துவரச் சொன்னார்கள். அப்போது நான் நினைக்கவில்லை, நானும் ஒரு காலத்தில் அந்த நாற்காலியில் உட்காருவேன் என நினைக்கவில்லை. பள்ளி மாணவனாக அண்ணா பிறந்தநாளை நடத்தியபோது அண்ணன் துரைமுருகனை அழைத்து வந்து பேச வைத்தேன். இன்று அவர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். நான் தலைவராக இருக்கிறேன். 1953-இல் நான் பிறந்தபோது குலக்கல்வி முறையை எதிர்த்துப் போராடினோம். இன்று நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். பள்ளி மாணவனாக நான் இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இன்றும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 1971-ஆம் ஆண்டு அண்ணா விழாவை நான் நடத்திய போது மூன்று மாநில முதலமைச்சர்கள் பங்கெடுத்து மாநில சுயாட்சிக்காக முழங்கினார்கள். இன்றும் முழங்கி வருகிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.