புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் என அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவுமாறும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.
அதற்கு, இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மோடியிடம் புதின் உறுதி அளித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உக்ரைனில் நிலவும் போர் குறித்து அந்நாட்டு அதிபர் ஜெலன்கி பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அப்போது, போர் காரணமாக அங்குள்ள சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித் தார். மேலும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பிரதமர் வலியுறுத்தினார். அமைதி பேச்சு வார்த்தைக்கு எந்த வகையிலும் உதவ தயார் எனவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.