வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
‘கடந்த 24 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்ததாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் வழக்கறிஞர்களை குற்றவாளிகளை போல் சித்தரித்தும், குற்றச் செயல்புரியும் குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சிப்படுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும், சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை ஆற்றி வரும் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தி காட்சியமைப்பதும், ஒருசில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதும் கண்டனத்துக்கு உரியது. காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் சாந்தி புகாரில் தெரிவித்துள்ளார்.