ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போரில் ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ படிப்புக்காகச் சென்றவர்கள். உக்ரைன் கல்வித்துறை கணக்கின்படி, 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு படிப்பதாகக் கூறப்பட் டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உக்ரைனில் படிக்கும் மாணவர்களில் 24 சதவீதம் பேர்இந்திய மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பஞ்சாப், டில்லி, ஹரியாணா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் சென்று படிக்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் என்று கூறப்படுகிறது. இதில் 2,500மாணவர்கள் போர் தொடங்கும் முன்பேஇந்தியா திரும்பிவிட்டனர். எஞ்சியுள்ளவர்கள் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், தேனி, உசிலம்பட்டி, கொடைக்கானல், தருமபுரி, கிருஷ்ணகிரி என்று பல்வேறு நகரங்கள், கிராமங்களில் இருந்தும் உக்ரைன் சென்றுள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் பிரச்சினைக்குப் பிறகுதான், இவ்வளவு மாணவர்கள் அங்கு சென்று படிக்கிறார்களா? அப்படி என்ன இருக்கிறது உக்ரைனில்? என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.
தேசிய மருத்துவக் கவுன்சில் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் உள்ள 554மருத்துவக் கல்லூரிகளில் 83 ஆயிரத்து 75 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே உள்ளன.இந்த இடங்களில் சேர்வதற்கு 2021-ம்ஆண்டு ‘நீட்’ தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் 8 லட்சத்து70 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் இடம் இல்லை. இதுவே மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்வதற்குக் காரணமாக உள்ளது. அந்த வகையில், இந்திய மாணவர்களுக்கு சாதகமாக உக்ரைன் மருத்துவக் கல்வி உள்ளது.
உக்ரைனில் மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு இல்லை. இந்தியாவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இடம் தரப்படுகிறது. உக்ரைனில் உள்ள மாணவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வம் இல்லை. இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில குறைந்தது ரூ.50 லட்சம் வரை செலவழிக்க வேண்டும். ஆனால், உக்ரைனில் சராசரியாக ரூ.17 லட்சம் செலவில் மருத்துவப் படிப்பை முடித்து விடலாம்.
இதுதவிர, உக்ரைன் மருத்துவக் கல்லூரி உலக அளவில் தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் கற்பிப்பதால் இந்திய மாணவர்களுக்கு ஏதுவாக உள்ளது. உக்ரைன் மருத்துவப் படிப்பைஇந்திய மருத்துவக் கவுன்சில், பாகிஸ்தான்மருத்துவக் கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பதால், இங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உலக அளவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
உக்ரைனில் மருத்துவம் படிக்கும்மாணவர்கள் இந்தியாவில் ‘எஃப்எம்ஜிஇ’ எனப்படும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் எழுதி 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இருந்தாலும், உக்ரைன் மருத்துவப் படிப்பு மீதான மோகம் குறையவில்லை.
அதேநேரம், இதுபோன்று அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களின் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதும், அவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடுகளில் வேலைக்குச் சேர்வதும் ‘பிரைன் ட்ரெய்ன்’ எனப்படும் இந்திய புத்திசாலிகள் பிற நாடுகளுக்கு இடம்பெயரும் நடைமுறை நாட்டுக்கு நல்லதல்ல என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேவைக்கேற்ப மருத்துவக் கல்லூரிகள்
இப் பிரச்சினையை சமாளிக்க, இந்தியமாணவர்களை தக்கவைக்கும் வகையில்மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவஇடங்களையும் தேவைக்கு இணையாகஅதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்றமருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்ற முயற்சி வாஜ்பாய், மன்மோகன் சிங் காலத்திலேயே எடுக்கப்பட்டு புதிதாக கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளன.
இந்த முயற்சியில் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் எய்ம்ஸ் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், மதுரை உள்ளிட்டமேலும் 16 நகரங்களில் எய்ம்ஸ் திறக்கும்முயற்சி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த முயற்சியை துரிதப்படுத்தி, தேவைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினால், இந்திய அறிவும், பணமும் வெளிநாட்டுக்குச் செல்லாமல் தடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.