கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த கோயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு இருபது ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதற்காக கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 31-ம் தேதி சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, திசா ஹோமங்கள், சப்தமாதா பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது மகா ஹோமம் வளர்க்கப்பட்டு கலசங்களுக்கு மகா தீபாரதனையும் நடத்தப்பட்டது. 81 ஹோம குண்டங்கள், 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகளும், மாலையில் முதல் கால பூஜையுடன் புதிதாக அமைக்கப்பட்ட, நவ அக்னி ஹோம குண்டங்கள், பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்களில் 1,300 கலசங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டது. தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து விருத்தகிரீஸ்வரை தரிசித்துச் சென்றனர்.
கும்பாபிஷேகம் முடிந்து 22 நாள்கள் ஆன நிலையில் அம்மன் சந்நிதியின் மூலவர் கோபுரத்தில் இருந்த 3 கோபுர கலசங்கள் நேற்று நள்ளிரவு திருடப்பட்டிருக்கிறது. 3 அடி உயரம் கொண்ட இந்த கலசங்களில் தலா 400 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் விருத்தாசலம் காவல்துறையினர், சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். 2,000 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலில் அறுபத்து மூவர் திருச்சுற்றில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையில் கை சேதமடைந்ததால் கடந்த 2002-ம் ஆண்டு அதனை அகற்றிவிட்டு, புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்பிறகு அகற்றப்பட்ட சிலையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளாததால் அந்த சிலை திருடு போனது. அதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ல் இந்துசமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் செந்தில்வேலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றினர். அதன்பிறகு 2014-ம் ஆண்டு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு இந்த கோயிலில் ஒப்படைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்!