ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 5,000 பேர். தங்கள் பிள்ளைகளைப் பத்திரமாக மீண்டுவருமாறு தமிழக அரசுக்கு பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. தமிழக மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் இந்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திய பிறகுதான், தமிழகத்திலிருந்து 5,000 பேர் உக்ரைன் சென்று படித்துவருவது பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரியவந்தது. இத்தனை ஆயிரம் இந்திய மாணவர்கள் மேற்படிப்புக்காக உக்ரைனைத் தேர்வுசெய்வதற்கு என்ன காரணம்?
மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ முதுகலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றில் அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய ஐரோப்பிய நாடுகளில் 4-வது இடத்தில் உக்ரைன் இருக்கிறது. உக்ரைன் அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் சில, மிகச் சிறந்த கல்வியை வழங்குகின்றன. அந்த பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர்.
உக்ரைனில் வெளிநாட்டு மாணவர்கள் சுமார் 76,000 பேர் படித்துவருகிறார்கள். அவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது என்று உக்ரைன் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சக இணையதளம் தெரிவிக்கிறது. மருத்துவக் கல்வி மட்டுமல்லாமல், பொறியியல் படிப்புகளுக்கும் இந்திய மாணவர்கள் உக்ரைனைத் தேர்வுசெய்கிறார்கள்.
இந்தியாவில் மருத்துவக் கல்வி இடங்கள் குறைவாக இருப்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகம் என்பதாலும் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கலாம் என்பது மருத்துவராகும் கனவுடன் இருக்கும் தமிழக மாணவர்களின் எண்ணமாக இருக்கிறது.
தற்போது, இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்க ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும், அதே உக்ரைனில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் செலவில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிடலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது இந்தியாவில் தனியார் கல்லூரியில் செலவாகும் மொத்த தொகையில் 25 சதவிகிதம்தான் உக்ரைனில் செலவாகும். எனவே, உக்ரைனை தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரனிடம் பேசினோம். “மருத்துவராக வேண்டும் என்கிற கனவுடன் இந்தியாவில் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கு தனியார் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான செலவு அதிகரித்துவிட்டது. அவ்வளவு பணம் செலவழிக்கக்கூடிய நிலையில், பெரும்பாலான மாணவர்கள் இல்லை. எனவே, ஒப்பீட்டளவில் வெளிநாடுகளில் செலவு குறைவு என்பதால், வெளிநாடுகளில் படிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இங்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும். ஆனால், அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்காது. அதனால் வெளிநாடு போகிறார்கள். சீனா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கிறார்கள்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனாலும், பொறியியல் அளவுக்கு மருத்துவத்துக்கு ஆயிரக்கணக்கில் இடங்கள் இல்லை. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என இருந்தாலும், இடம் கிடைப்பது மிக மிக கடினமாக இருக்கிறது. காரணம், போட்டி அதிகமாகிவிட்டது.
பிளஸ் 2 முடித்துவிட்டு, முதல் முயற்சியிலேயே நீட் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருபவர்கள் மிகவும் குறைவு. இரண்டாம் முறை அல்லது மூன்றாம் முறை எழுதி தேர்ச்சிபெறுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு அந்தளவுக்கு சிரமப்படுகிறார்கள். ஆகையால்தான், வெளிநாடு சென்று படிப்பதென்கிற முடிவுக்கு வருகிறார்கள். ஓரளவு பண வசதி இருப்பவர்கள்தான் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு சென்று படிக்கிறார்கள். கடன் வாங்கிச்சென்று படிப்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
வெளிநாட்டில் படித்துமுடித்துவிட்டு இங்கு வந்த பிறகு, உடனே மருத்துவராகிவிட முடியாது. வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் நடத்துகிற ‘எக்ஸிட்’ தேர்வை எழுதி, அதில் தேர்ச்சிபெற வேண்டும் என்பது கட்டாயம். அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், ஓர் ஆண்டு காலம் இங்கு இன்டர்ன்ஷிப் முடிக்க வேண்டும். அதன் பிறகுதான், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
எக்ஸிட் தேர்வும் சற்று கடினமாக இருக்கும். அதில் தேர்ச்சிபெறுவது கொஞ்சம் சிரமம்தான். அதில் தேர்ச்சிபெறுவதற்கு பலருக்கு இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள்கூட ஆகின்றன. பிலிப்பைன்ஸில் படிக்கும் மாணவர்களுக்கு, கடைசி ஆண்டில் எக்ஸிட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
உக்ரைன் போன்ற நாடுகளுக்கு நம் மாணவர்கள் செல்வதற்கு முக்கியக் காரணம் பணப் பிரச்னைதான். அங்கு போய் புதிதாக மொழி கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோக, அங்குள்ள சீதோஷ்ணம் நமக்கு சிரமமாக இருக்கிறது. மொழி தெரியாததால், அந்த நாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து நடைமுறை சிகிச்சை அனுபவம் பெறுவது சிரமம். வெளிநாடு சென்று படிப்பதால் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன.
எந்தப் பிரச்னையும் இல்லாத அமைதியான நாடு என்பதால், நம் மாணவர்கள் உக்ரைன் சென்றுகொண்டிருந்தார்கள். மொழி, சீதோஷ்ணம் போன்ற பிரச்னைகளை எப்படியோ சமாளித்துக்கொண்டு படித்தனர். இப்போது போர் ஏற்பட்டு பெரும் பிரச்னை எழுந்துள்ளது. இனிமேல், உக்ரைன் சென்று படிப்பதற்கு எத்தனை பேர் ஆர்வம் காட்டுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது” என்கிறார் பொன்.தனசேகரன்.