ராதா என்ற ஆசிரியர் தனது இடமாறுதல் கோரிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கியபோது, “பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்யூஷன், பகுதி நேர வேலை, வேறு தொழில்களில் என ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.
“அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு போதுமான தொகையை வழங்கியபோதிலும், ஏழை மாணவர்களுக்கான தரமான கல்வி ஆசிரியர்களால் வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களின் தரம், தனியார் பள்ளி மாணவர்களின் தரத்தோடு ஒப்பிடும் வகையிலும் இல்லை. எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுடைய பணி மற்றும் பொறுப்புகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக ட்யூஷன் வகுப்புகளை எடுப்பதிலும், பகுதி நேர வேலைகள் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை குழு அமைத்து கண்காணிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என நீதிபதி கூறியுள்ளார்.