தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மேயர் பதவிக்கான ரேஸ் தீவிரமாக உள்ளது. மேயர் ரேஸில் உள்ளவர்களுக்கு ஆதரவாக திமுகவின் பெருந்தலைகள் எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர்.
தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மேயர் பதவிக்கான போட்டி கடுமையாக நிலவுகிறது. மதுரையின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுகவின் மூத்த தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 80 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 67 இடங்களையும், காங்கிரஸ் 5, சிபிஎம் 4, மதிமுக 3, விசிக 1 இடத்தையும் கைப்பற்றியது. அதிமுக 15 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
ஆளும் திமுக சார்பில் மதுரை மாநகராட்சியில் வெற்றி பெற்றவர்களில் மேயர் பதவிக்கு 4 பெண்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு திமுகவின் பெருந்தலைகள் ஆதரவு அளித்துள்ளனர். ரோகினி பொம்ம தேவன், விஜய மோஷுமி சேதுராமலிங்கம், வாசுகி சசிகுமார் மற்றும் இந்திராணி பொன் வசந்த் மேயர் பதவிக்கான ரேஸில் உள்ளனர். மேலும், அவர்களுக்கு அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் பி.டி.ஆர். தியாக ராஜன் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான பொன் முத்துராமலிங்கம் தனது மருமகள் விஜயா மோஷுமிக்கு விஜயாவுக்கு ஆதரவு அளித்துள்ளர். இந்த பதவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொம்மதேவன் மற்றும் சசிகுமார் ஆகியோர் எ.வ. வேலுவின் நெருங்கிய உதவியாளர்கள். இவர்களுடைய மனைவிகளும் மேயர் ரேஸில் உள்ளனர். இந்திராணி பொன் வசந்தின் குடும்பம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடன் நெருக்கமாக உள்ளது.
நிதியமைச்சர் ஸ்டாலினுடன் நல்ல உறவில் இருப்பதால், இந்திராணி பொன் வசந்துக்கு மேயர் பதவி அளிக்க ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“