கோலார்:கோலாரில், சி.பி.ஐ., அதிகாரிகள் என கூறி, ஏ.பி.எம்.சி., முன்னாள் தலைவர் ரமேஷ் வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கி முனையில் 20 லட்சம் ரூபாய், 1 கிலோ தங்க நகைகள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து தலைமறைவானது.
கர்நாடகா மாநிலம் கோலார் பைரே கவுடா நகரில் ஏ.பி.எம்.சி., எனப்படும் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ், 64, அவரது மனைவி பத்ரா, 56, ஆகியோர் வசித்து வருகின்றனர். ‘மொபைல் போன்’இவர்களின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் வந்திறங்கி கதவை தட்டியது.
ரமேஷ் கதவை திறந்ததும், வீட்டுக்குள் புகுந்த ஐந்து பேரும், தங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் என கூறி, வீட்டில் இருந்தவர்களின், ‘மொபைல்போன்’களை பறித்துக் கொண்டனர். வீட்டின் பூஜை அறையில் ரமேஷ் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டனர். பின் வீட்டில் உள்ள அனைத்து லாக்கர்களையும் திறந்த அந்த கும்பல், 20 லட்சம் ரூபாய், 1 கிலோ தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டது.
மிரட்டல்
அவர்களின் செயலில் சந்தேகம் அடைந்த ரமேஷ், ‘சி.பி.ஐ., அதிகாரிகள் போல தெரியவில்லையே, நீங்கள் யார் ‘ என கேட்டதற்கு, அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய பின், வீட்டை விட்டு வெளியேறினர்.அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அந்த கும்பல் மீது சந்தேகம் எழுந்து, ரமேஷின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் பொருட்கள் சிதறி இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். பூஜை அறையில் கட்டப்பட்ட நிலையில் இருந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவியின் கட்டுகளை அவிழ்த்தனர்; போலீசுக்கு புகார் செய்தனர்.இந்த துணிகர கொள்ளை குறித்து, கோலார் போலீசார் தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Advertisement