உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நான்கு முனைப்போட்டி நிலவி வந்தாலும், உண்மையான போட்டி என்னவோ சமாஜ்வாதி –
பாஜக
இடையேதான் என்கிறார்கள் அம்மாநில அரசியல் விவரம் அறிந்தவர்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு முன்பு பாஜகவில் இருந்து மூத்த அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். அதில், முக்கியமானவர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகக் கருதப்படும்
சுவாமி பிரசாத் மவுரியா
. இவர் முதலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். ஆனால், கடந்த தேர்தலுக்கு முன்பு அவரை கட்சியில் இருந்து மாயாவதி நீக்கினார்.
இதனால், பாஜகவில் இணைந்த அவர் அக்கட்சியின் சார்பில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குஷிநகர் மாவட்ட பட்ரோனா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவில் அவர் இணைந்த பிறகு அவரது மகள் சங்கமித்ரா, பாஜக சார்பில் கடந்த மக்களவை தேர்தலில் பதாயூ தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார்.
இந்த சூழலில், பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா, அக்கட்சி சார்பில் குஷிநகர் மாவட்டத்தின் பஸில்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் சுரேந்திரா குஷ்வாஹா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக எம்.பி.யும், சுவாமி பிரசாத் மவுரியாவின் மகளுமான சங்கமித்ரா, பாஜகவுக்கு வாக்கு சேகரிக்காமல், தனது தந்தைக்காக முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார். பஸில்நகரின் ஜவுரா முகுலி கிராமத்திற்கு சென்ற சங்கமித்ரா, ரகசியமாக ஒவ்வொரு வீடாக சென்று சமாஜ்வாதி கட்சியில் போட்டியிடும் தனது தந்தைக்காக வாக்கு சேகரித்துள்ளார்.
ஆனால், உள்ளூர் பாஜகவினர், பத்திரிகையாளர்கள் இதனை பார்த்து விட்டதால், உடனடியாக அவர் தனது காரில் சென்று அமர்ந்து கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுபோன்று தான் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டார். இருப்பினும், சங்கமித்ரா மீது குஷிநகர் மாவட்ட பாஜகவினர் தலைமையிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர்.